இந்திய விவசாயிகளுக்கு டுவீட்டரில் ஆதரவு, அரசுக்கு அமெரிக்காவின் ஆதரவு.
உலகப் பிரபலங்களான ரிஹானா, கிரேத்தா போன்ற சிலர் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் இந்திய விவசாயிகளுக்காக டூவீட்டராதரவு தெரிவிக்க, அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு “ஜனநாயக ரீதியான அமைதியான போராட்டங்களை எதிர்கொண்டு நாட்டின் விவசாய நிலபரத்தை மாற்றும் சட்டங்களை அறிமுகப்படுத்தும் இந்திய அரசுக்குப் பாராட்டுக்களைத்,” தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசு ஜனநாயக ரீதியில் அமைதியாக நடத்தப்படும் போராட்டத்தை ஏற்றுக்கொள்வது பற்றிச் சிலாகித்திருந்தார்கள்.
“பொதுவாகச் சொல்லப்போனால் இந்திய அரசு சந்தைச் சக்திகளைச் சீர்செய்து, அங்கே வெவ்வேறு சக்திகளை ஈர்த்து நவீனப்படுத்துவதை அமெரிக்க அரசு வரவேற்கிறது,” என்று குறிப்பிடப்பட்டது.
அதே சமயம் அமெரிக்க ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் சிலரும், உலகப் பிரபலங்களைப் போலவே விவசாயிகளுக்காக ஆதரவைத் தெரிவித்திருந்தார்கள். ‘இந்திய அரசு போராட்டம் நடத்தும் விவசாயிகளைக் கடுமையான வழிகளைப் பாவித்து மிரட்டி வாயடைக்கச் செய்ய முயல்கிறது,’ என்பது அவர்களுடைய கருத்தாக இருந்தது.
“தவறான, திரிபுபடுத்தப்பட்ட செய்திகளினால் நிலைமையைத் தவறாகப் புரிந்துகொண்டே குறிப்பிட்ட பிரபலங்கள் இந்திய அரசை விமர்சித்து வருகிறார்கள்,” என்று குறிப்பிட்டு அவர்களைச் சாடினார்கள் அமித் ஷா உட்பட்ட பா.ஜ.க-வினர்.
“இந்தியாவின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான சட்டங்களை இந்தியப் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டது. அதை எதிர்த்துக் குரலெழுப்பும் ஒரு சாராருடன் அரசு பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறது, அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்கள் இந்திய விவசாயிகள் சுதந்திரமாகச் செயற்பட்டுத் தங்களுடைய சுபீட்சத்தை ஏற்படுத்திக்கொள்ளப் பயன்படும். அதேசமயம் சுற்றுப்புற சூழலைப் பாதிக்காத விவசாயத் துறையை உருவாக்கவும் இது அடிப்பதையாக இருக்கும்” என்ற அறிக்கை இந்தியாவின் சார்பில் வெளியிடப்பட்டது.
https://vetrinadai.com/news/india-farmers-protest/
சாள்ஸ் ஜெ. போமன்