கிளிநொச்சியில் கால் பதித்தது நீதிக்கான பேரணி – பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை
நீதிக்காக பேரணியாக வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை #P2P இன்று கிளிநொச்சியில் கால்பதித்தது. கிளிநொச்சியின் கரடிப்போக்குச் சந்தியை அண்மித்து இன்றைய நாள் நிறைவுகொண்டது.
நாளை அங்கிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணத்தை நோக்கி தான் எழுச்சி நடைப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
பேரெழுச்சியாக இன்று நான்காவது நாளாக தொடரும் இந்த நீதிக்கான எழுச்சி நடை , வவுனியாவிலிருந்து ஆரம்பித்து மன்னார் மாவட்டத்திற்கு சென்றது.தொடர்ந்து மல்லாவி நகர் நோக்கி சென்ற இந்த பேரணி, அங்கிருந்து புறப்பட்டு கிளிநொச்சியில் இன்று கால்பதித்தது.இடையிடையே போலிசார் நீதிமன்ற தடை உத்தவுகளை வழிமறித்து வாசித்து, தடைகளை ஏற்படுத்த முயன்ற போதும் மக்களின் எழுச்சி மிக்க பயணம் தொடர்ந்து பொலிகண்டி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அத்தோடு மன்னார் எல்லையை பேரணி அண்மித்தபோது போலிசார் வாகனங்களை மறித்து வாகன இலக்கங்களை எழுயிருந்தனர்.
எது எவ்வாறு இருந்தாலும் மக்கள் தொடர்ச்சியாக நீதிக்கான குரல்களை வானுயர எழுப்பியபடி தங்கள் பேரணியை தொடர்ந்து முன்னெடுத்தனர்.
நாளை யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் இந்த பேரணியில் பங்குபற்ற வருமாறு வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் வடக்குகிழக்கு தமிழ் பேசும் மக்களின் சிவில் அமைப்புக்கள் கூட்டாக அழைப்புவிடுத்துள்ளன. பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த அழைப்போடு இணைந்து தங்கள் அழைப்புக்களையும் ஒரே குரலில் எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.