கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் ஈகுவடோரில் தேர்தல் நடக்கிறது.
நாட்டின் பாராளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கவும் ஈகுவடோரில் இன்று தேர்தல் நடாத்தப்படுகிறது. வாக்களிக்கவிருக்கு நாட்டின் 13 மில்லியன் பேர் ஒவ்வொருவராக வாக்குச் சாவடிக்குள் நுழையவேண்டும், தம்முடனே அவர்கள் பேனாவை எடுத்துவரவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
அந்த நாட்டில் சுமார் 255,000 பேர் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் 15,000 பேர் இறந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
நாட்டின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களுண்டு. நாட்டின் சரித்திரத்திலேயே முதல் தடவையாக 16 சோடிப் பேர் அப்பதவிக்காக மோதுகிறார்கள். ரபாயேல் கொரேரா என்ற முன்னைய ஜனாதிபதியின் வழியில் நாட்டைத் திருப்பவேண்டுமென்று குறிப்பிட்டு வேட்பாளராக நிற்கிறார் இடதுசாரிக்காரரான ஆண்டிரேஸ் அராவுஸ். 2017 ம் ஆண்டுவரை ஜனாதிபதியாக இருந்த கொரேராவின் 10 வருட இடதுசாரி ஆட்சியில் நாட்டின் வறுமை மூன்றிலொரு விகிதத்தால் குறைக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக் காட்டி அதே வழியில் பெரிய நிறுவனங்களுக்கு வரிகள் விதித்து அவை மூலம் வறியவர்களுக்கு உதவப் போவதாகச் சொல்கிறார்.
லெனின் மொரேனோ என்ற தற்கால ஜனாதிபதி மீண்டும் தேர்தலுக்குப் போட்டியிடவில்லை. பணக்காரரும், வங்கிகள், நிறுவனங்களுக்கு உரிமையாளருமான குயர்மோ லஸ்ஸோ மெண்டோஸா மூன்றாவது தடவையாகப் போட்டியிடுகிறார். இரண்டு மில்லியன் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதாகவும், நாட்டின் லஞ்ச ஊழல்களை ஒழித்து, தனியார்களின் நிறுவனங்களை ஈர்க்கவும் போவதாகச் சொல்லிப் போட்டியிடுகிறார் லஸ்ஸோ மெண்டோஸா.
35 வயதான அராவுஸும், 65 வயதான லஸ்ஸோ மெண்டோஸாவுமே கருத்துக் கணிப்பீடுகளில் அதிக ஆதரவைப் பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது.
தேர்தலில் 40 % விகித வாக்கைக் கைப்பற்றுவதுடன், தனக்கடுத்தவரை விடப் 10% வாக்குகளைப் பெற எந்த ஒரு வேட்பாளரும் தவறினால் ஏப்ரல் 11 ம் திகதியன்று முதலிரண்டு இடங்களைப் பெற்றவர்களுக்கிடையேயான தேர்தல் நடாத்தப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்