மியான்மாரில் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுக்கிறது.
மக்கள் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தும் கூட ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மியான்மார் இராணுவத்தை மீறி யங்கொன் நகரில் திரண்டு தாம் தெரிந்தெடுத்த அரசிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு கோருகிறார்கள். “1988 இல் இராணுவம் செய்ததை மீண்டும் செய்ய அனுமதிக்க மாட்டோம்,” என்ற கோஷம் எழுப்பப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்துவிட்டு 1962 ஒரு சோஸலிசக் கட்சி ஆட்சியைப் பிடித்து நாட்டில் சர்வாதிகாரத்தை நிலைநாட்டியது. நாட்டின் இராணுவம் 1988 இல் அரசாங்கத்தைப் புரட்டியது. 2021 இல் நடந்திருப்பது மூன்றாவது தடவை. ஒற்றைக்கட்சி ஆட்சி, இராணுவ ஆட்சிகளில் நடந்த கோரத்தைச் சகித்து வாழ்ந்த மியான்மார் மக்கள் இத்தவணை வாய்பொத்தியிருப்பார்களென்று தோன்றவில்லை.
நாட்டில் இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த இணையச் சேவைகள் மீண்டும் ஞாயிறன்று திறக்கப்பட்டிருக்கின்றன. அதைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டு போராட்டங்களில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.
சமையல் பாத்திரங்களில் தட்டியும், அவைகளை ஒன்றோடொன்று மோதியும் சத்தம் ஏற்படுத்திப் பலர் தமது ஆதரவை நாட்டின் தலைவரான ஔன் சான் சு ஷீயின் அரசுக்குக் காட்டுகிறார்கள். அதைத் தவிர பிரபல ஆங்கிலச் சினிமாவான ஹங்கர் கேம்ஸில் செய்வது போன்ற மூன்று விரல்களை உயர்த்திக் காட்டி நன்றி, பாராட்டுக்கள், விடைபெறுதல் ஆகியவைகளைச் சித்தரித்தும் மக்கள் வீதிகளில் அணிதிரண்டிருக்கிறார்கள். யங்கோன் தவிர வேறு நகரங்களிலும் வீதிப்போராட்டங்கள் நடத்துவதாகத் தெரிகிறது.
ஐ.நா-வின் மனித உரிமைகள் அமைப்பு மியான்மாரில் தங்களது கருத்தை அமைதியாகத் தெரிவிக்கும் மக்களுக்குச் சகல பாதுகாப்புக்களையும் கொடுக்கவேண்டுமென்று சுட்டிக்காட்டுகிறது. இதுவரை மியான்மாரைக் கைப்பற்றியிருக்கும் இராணுவத் தலைமை வீதிகளில் இறங்கி மனிதர்களைத் துரத்தவோ, தாக்கவோ செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்