தான் போட்ட கொவிட் கட்டுப்பாடுகளைத் தானே மீறும் கிரேக்கப் பிரதமர் மீது கடுமையான விமர்சனங்கள்.
கிரீஸ் பிரதமர் கிரியாக்கோஸ் மித்தோதாக்கிஸ் நாட்டில் போடப்பட்டிருக்கும் கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடுகளை இரண்டாவது தடவையாக மீறியிருக்கிறார். தனது அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இக்காரியா தீவில் சுமார் 30 – 40 கொண்ட விருந்தொன்றில் கலந்து கொண்டது சமூகவலைத்தளங்களில் வலம் வருகிறது.
கொரோனாத் தொற்றுக் கடுமையாகப் பரவிவரும் கிரீஸில் சமீபத்தில் சமூகக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. மாலை 18.00 மணிக்குப் பின்னர் எவரும் வெளியே நடமாடுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. மக்கள் தமது வீட்டிலிருந்து வேலைக்கும், அவசிய காரணங்களுக்காகவும் தவிர வெளியேற அனுமதியில்லை. தத்தம் நகரங்களைத் தவிர வேறு நகரங்களுக்கும் எவரும் பயணம் செய்வது தடை செய்யப்பட்டிருக்கிறது.
கிரீஸ் மக்கள் தத்தம் வீடுகளிலும் மூன்று பேரைத்தவிர அதிகமானவர்களுடன் கூடுவது தடைசெய்யப்பட்டு அதை மீறுகிறவர்களுக்கு 300 எவ்ரோக்கள் அபராதம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இச்சந்தர்ப்பத்தில் பிரதமர், அமைச்சர்கள் அதிகாரிகளுடன் விருதொன்றில் கலந்துகொண்டது பலரையும் கோபப்படுத்தியிருக்கிறது. அவ்விருந்தின் காரணம் நாட்டில் ஆரம்பிக்கவிருக்கும் தடுப்பு மருந்துகள் கொடுத்தல் பற்றிய திட்டமிடல் என்று பிரதமரின் அலுவலகம் தெரிவிக்கிறது. மக்களைக் காப்பாற்றுவதற்கான தடுப்பு மருந்து போடலை ஆரம்பிக்கும் இச்சமயத்தில் ஒற்றுமையாக அரசை ஆதரிக்காமல், எதிர்க்கட்சிகள் இதுபோன்ற சிறிய விடயங்களைப் பெரிதுபடுத்துவதை விளாசியிருக்கிறார் பிரதமர்.
இதற்கு முன்பு ஒரு தடவை கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறிப் பிரதமர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் மலைப்பிரதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். அச்சமயத்தில் அவர் வழியில் சந்தித்தவர்களுடன் சேர்ந்து படங்கள் எடுத்துப் பிரசுரித்திருக்கிறார். கட்டாயமாக அணிந்திருக்கவேண்டிய முகக்கவசத்தையும் எவரும் அணிந்திருக்கவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்