தன்னிடம் வேலை செய்பவர்களின் மனைவிமாருக்கும் சம்பளம் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கும் இந்திய – எமிரேட்ஸ் தொழிலதிபர்.
தன்னிடம் வேலை செய்பவர்களின் பெற்றோருக்கு ஓய்வூதியங்களும், பிள்ளைகளுக்கு கல்வி உதவியும் செய்துவரும் ஏரீஸ் குரூப் நிறுவனங்களின் உரிமையாளர் ஸொகான் ரோய் விரைவில் தொழிலாளிகளின் மனைவியருக்கும் மாதாமாதம் ஒரு தொகையைக் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
ஷார்ஜாவை மையமாக வைத்து 1998 இல் ஆரம்பிக்கப்பட்ட ஏரீஸ் குரூப் நிறுவனங்கள் கடல் போக்குவரத்தில் வெவ்வேறு சேவைகளை வழங்குகின்றன. 16 நாடுகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய அந்த நிறுவனம் சொகன் ரோய் என்ற கேரளாவைச் சேர்ந்தவரால் ஆரம்பிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
கொவிட் 19 காலத்தில் தனது ஊழியர்கள் வேலையில் காட்டிய கரிசனையைக் கண்டு மனம் நெகிழ்ந்ததாகச் சொல்லும் சொகன் ரோய் அதனாலேயே அவர்களுடைய குடும்பத்தினருக்கும் எதையாவது செய்யவேண்டுமென்று யோசிக்க ஆரம்பித்ததாகக் குறிப்பிடுகிறார்.
2012 இல் இந்திய குழந்தைகள், பெண்கள் சுபீட்ச அமைச்சர் கிருஷ்னா திரத்துடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த எண்ணத்தை அவர் குறிப்பிட்டதாக சொகான் ரோய் குறிப்பிடுகிறார். அதையடுத்து சமீபத்தில் இந்திய நீதிமன்றத் தீர்ப்பொன்றில் “மனைவி வீட்டில் செய்யும் வேலைகளின் பெறுமதி கணவன் வெளியே சென்று உழைத்துக் கொண்டு வருவதற்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல,” என்று குறிப்பிடப்பட்டிருந்ததை வாசித்ததாகவும் சொல்கிறார்.
தற்போதைய நிலையில் ஏரீஸ் குரூப் நிறுவன ஊழியர்களின் குடும்ப விபரங்களைச் சேர்த்து வருவதாகவும் விரைவில் அது முடிந்தவுடன் ஊழியர்களின் மனைவிக்காக மாதாமாதம் கொடுக்கக்கூடிய தொகை எதுவென்று கணித்து அறிவிக்கப்படுமென்றும் சொகான் ரோய் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்