இவ்வருடக் காலநிலை மாநாட்டின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருப்பவர் எண்ணெய் நிறுவன அதிபர்!

எகிப்தில் நடந்த COP27 க்கு அடுத்ததாக ஐ.நா -வின் காலநிலை மாநாடு 2023 ஐ நடத்தவிருக்கு நாடு ஐக்கிய அராபிய எமிரேட்ஸ் ஆகும். இவ்வருடம் நவம்பர் 30 திகதி டுபாயில் ஆரம்பமாகவிருக்கும் அந்த மாநாட்டை நடத்த சுல்தான் அஹ்மத் அல் – ஜபர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது எமிரேட்ஸின் காலநிலை மாற்றத்துக்கெதிரான திட்டங்களுக்கான பிரத்தியேக தலைவராக இருக்கும் அல் -ஜபர் எமிரேட்ஸ் நாடுகளின் தேசிய பெற்றோலிய  நிறுவனத்தின் அதியுயர்மட்ட நிர்வாகியுமாகும். அவருக்குப் பக்கபலமாக நாட்டின் இளைய தலைமுறை அமைச்சர், சுற்றுப்புற சூழல் திணைக்களமொன்றின் அதிபர் ஆகியோர் பணியாற்றுவார்கள்.

நாட்டின் பெற்றோலிய நிறுவனத்தின் அதிபரொருவரைக் காலநிலை மாற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றித் திட்டமிட்டு இயங்கும் சர்வதேச அமைப்புக்குத் தலைவராக்கியிருப்பது சர்வதேச ரீதியில் வெவ்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. காலநிலை மாற்றங்களுக்கு அதிமுக்கிய காரணியாக இருக்கும் பெற்றோலியப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமொன்றின் அதிபர் காலநிலை மாற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றிய முடிவுகளை எடுக்கும் அமைப்புக்கு எந்த அளவில் ஆதரவாக இருக்கக்கூடும் என்ற விமர்சனமே அதிகமாக இருக்கிறது.

“நாம் நிகழ்கால நடைமுறை  நிலபரத்துக்குப் பொருத்தமாகச் சாத்தியப்படுத்தக்கூடிய தீர்வுகளை முன்வைப்பதன் மூலம் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைத்துக் காலநிலை மாற்றங்களைத் தடுக்கும் வழிகளைப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காத வகையில் உண்டாக்க முடியும். காலநிலை மாற்றங்களைத் தடுக்கும் தீர்வுகள் பொருளாதார வளர்ச்சியையும், நிலையான வளர்ச்சியையும் கொடுக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்,” என்று அல் ஜபர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

காலநிலை மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படும் வறிய நாடுகளுக்கான உதவிகளை எப்படிச் செய்வது, என்பது பற்றி எகிப்தில் நடந்து முடிந்த காலநிலை மாநாட்டில் பெரிதும் விவாதிக்கப்பட்டுச் சில தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. ஆனால், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்துப் பசுமையான பூமியை உண்டாக்குவதற்கான புதிய குறிக்கோள்கள் எவையும் எடுக்கப்படவில்லை என்பது சூழல் பேணுவதற்காகப் போராடும் அமைப்புகளின் விமர்சனமாக இருந்து வருகிறது. அந்த நிலைமைக்குக் காரணம் எண்ணெய் வள நாடுகளும், கரியமிலவாயுவை அதிகமாக வெளியேற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுமே என்று அவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அல்- ஜபர் COP28 க்குத் தலைமை தாங்க நியமிக்கப்பட்டிருப்பதன் காரணமும் அதுவே என்று அவ்வமைப்புக்கள் கடுமையாகச் சாடியிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *