பத்து வருடங்களுக்குப் பின்னர் நோர்வே நீதிமன்றமொன்று உதோயாப் படுகொலைகளின் ஞாபகச்சின்னத்தை வைக்கப் பச்சைக் கொடி காட்டியிருக்கிறது.
2011 ஜூலை 22 நோர்வேயின் சரித்திரத்தில் மறக்கமுடியாத படுகொலைகள் நடந்த தினம். ஒரே நாளில் ஒரேயொருவன் 77 உயிர்களைப் பறித்தெடுத்தான். ஒஸ்லோவுக்கு அருகே உதோயா தீவில் நடந்த அந்தப் படுகொலைகளின் ஞாபகச் சின்னத்தை வைப்பது பற்றிய சர்ச்சை ஒரு நீண்டகால இழுபறியாக இருந்தது.
அன்றைய தினத்தில் ஆண்டர்ஸ் பிரெய்விக் என்ற வெள்ளை இனவாதி, ஒரு சிறிய பாரவண்டிக்குள் இரசாயண உரங்களிலான குண்டொன்றைத் தயாரித்துக்கொண்டு ஒஸ்லோவின் பாராளுமன்றக் கட்டடத்தருகே நிறுத்தி அதை வெடிக்கவைத்தான். பக்கத்துக் கட்டடங்களெல்லாம் உடைந்து விட எட்டுப் பேர் அக்குண்டுவெடிப்பில் பலியானார்கள்.
பொலீசாரின் கவனமெல்லாம் அதிலிருக்க அவன் இயந்திரத் துப்பாக்கியுடன் உதோயா என்ற தீவை நோக்கிப் பொலீஸ் உடையில் சென்றான். அங்கே நோர்வேயின் முக்கிய அரசியல் கட்சியின் இளைஞரணி முகாம் நடந்துகொண்டிருந்தது. ஒஸ்லோக் குண்டு வெடிப்பால் தான் பாதுகாப்புக்காக அந்த முகாமுக்கு அனுப்பப்பட்டதாக அருகிலிருந்து சிறு துறைமுகத்தில் சொல்லிப் படகொன்றில் தீவுக்குப் போனான்.
தீவில் இறங்கியதும் கண்ணுக்குப் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினான் பிரெய்விக். எங்கும் தப்பிப்போக வழியற்று மாட்டிக்கொண்ட 69 பேரை அவன் அங்கே கொன்றொழித்தான். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்விதத் தடையுமின்றி தீவெங்கும் சுற்றித்திரிந்து சுட்டுத் தள்ளிய அவன் தாமதமாக வந்து சேர்ந்த பொலீசாரிடம் சரணடைந்தான்.
அமைதியான நாடான நோர்வேயில் அந்தக் கொலைகள் ஏற்படுத்திய பாதிப்பு மிகவும் பெரியது. அதை ஞாபகப்படுத்த ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமென்று பலராலும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், நினைவுச் சின்னத்தை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதை ஸ்தாபிக்கும் காலம் நெருங்க நெருங்க அத்தீவையடுத்த கரையில் வாழ்பவர்கள், சில பெற்றோர் அப்படியான ஒரு நினைவுச்சின்னம் தமது வேதனைகளைக் கிளறும் என்று சுட்டிக்காட்டி நீதிமன்றத்துக்குச் சென்றார்கள்.
ஒருசில வருடங்களாகவே நீதிமன்றத்தில் இழுபட்ட அந்த விவகாரம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சிலரின் வேதனையை விடப் பெரும்பாலானோருக்கு வெவ்வேறு காரணங்களுக்காக அவசியமாக இருக்கும் ஞாபகச் சின்னத்தை அங்கே உண்டாக்கவேண்டியது முக்கியம் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது.
உதோயா படுகொலைகள் நடந்த பத்தாவது வருடத் தினமான ஜூலை 22 இல் ஞாபகச் சின்னம் திறந்து வைக்கப்படவிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்