தடுப்பு மருந்துகளை ஏவுகணைகளாக்கிச் சீனாவின் அயலாரை நோக்கி எய்வதன் மூலம் சீனாவின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்கிறது இந்தியா.
தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதில் உலகின் முதலிடத்தைப் பெற்ற நாடு என்பதைத் தனக்குச் சாதகமாக்கிப் பெருமளவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஆசிய நாடுகளுக்கெல்லாம் கொடுத்து வருகிறார் மோடி.
ஆப்கானிஸ்தானுக்குத் தடுப்பு மருந்துகளை அனுப்பியதன் பின், கம்போடியா, மங்கோலியா மற்றும் பசுபிக் தீவு நாடுகளுக்கெல்லாம் அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளை அனுப்ப ஒப்பந்தம் தயாராகிவிட்டது.
இந்தியா ஏற்கனவே மியான்மார், நேபாளம், பூட்டான், சிறீலங்கா, பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகள் தமது தடுப்பு மருந்துப் போடலை ஆரம்பிப்பதற்காக இந்தியா இலவசமாக ஒரு பகுதி தடுப்பு மருந்துகளை அனுப்பிவைத்திருக்கிறது. அவை தவிர தென்னாபிரிக்கா, சவூதி அரேபியா, பிரேசில் போன்ற நாடுகளும் அதை வாங்கியிருக்கின்றன. இதுவரை உலகின் 17 நாடுகளுக்கு இந்தியா அம்மருந்தை இலவசமாகவோ, விலைக்கோ அனுப்பிவைத்திருப்பதாகத் தெரிகிறது.
தனது கூட்டாளியான கம்போடியாவுக்குச் சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை அனுப்பிவைப்பதாக உறுதிகூறியிருக்கிறது. இன்னொரு சீன ஆதரவு நாடான மியான்மாருக்குச் சீனா 300,000 தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதாக உறுதிகூறியிருக்கிறது. ஆனால், கம்போடியா, மியான்மாருக்கு அவை எப்போ கிடைக்குமென்று தெரியாத நிலை. மியான்மார் மேலும் 30 மில்லியன் மருந்துகளை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறது.
ஐரோப்பாவிலும் செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் மட்டுமன்றி சமீபத்தில் ஆஸ்திரியாவும் சீனாவின் மருந்துகளை நாடும் உத்தேசத்திலிருக்கும் இச்சமயத்தில் இந்தியா முடிந்தவரை நடுத்தர நாடுகளிடையே தனது தடுப்பு மருந்து இராஜதந்திரத்தைப் பிரயோகித்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்