ஆஸ்ரேலியாவின் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகள் அங்கு குடியேறிவருபவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறதா?
இந்தியாவிலிருந்து ஆஸ்ரேலியாவுக்கு வந்து அங்கே 2018 இல் குடியுரிமை பெற்ற ராஜ்சிறீ பட்டேல் இந்தியாவிலிருந்து தனது பெற்றோரை விருந்தாளிகளாகக் கூட்டிவந்திருந்தார். நாட்டுக்குத் திரும்பும்போது தனது குழந்தை மகன் நவீனை அவர்களுடன் அனுப்பிவைத்தார். 2019 இல் புழக்கத்துக்கு வந்த கொரோனாக் கட்டுப்பாடுகள் தாய்க்கும் மகனுக்கும் இடையே புகுந்து இதுவரை 18 மாதங்கள் அவர்களைப் பிரித்து வைத்திருக்கிறது.
சுமார் மூன்று வயதான ஆஸ்ரேலியக் குடிமகனான நவீன் ஆஸ்ரேலியாவுக்குத் தனியே பயணிக்க முடியாது. தனது பாட்டன், பாட்டியுடன் சேர்ந்து ஆஸ்ரேலியாவுக்கு அவனைக் கொண்டுவர ராஜ்சிறீ முயற்சித்தாலும் அவர்களிருவருக்கும் சேர்த்து விசா கிடைக்கவில்லை. சமீபத்தில் தாயாருக்கு மட்டுமே விசா கிடைத்தது, ஆனால் அவர் தனியே ஆஸ்ரேலியாவுக்கு வர விரும்பவில்லை.
தனிப் பெற்றோரான ராஜ்சிறீ தாதியாக வேலை செய்கிறார். தான் இந்தியாவுக்குப் போய் மகனைக் கொண்டுவர முற்பட்டால் ஒருவேளை பல நூறு ஆஸ்ரேலியர்களைப் போலத் திரும்பி வரமுடியாமல் அங்கேயே மாட்டிக்கொள்ளலாம் என்று பயப்படுகிறார். அப்படியான ஒரு நிலைமையில் வருமானமின்றி ஆஸ்ரேலியாவிலிருக்கும் தனது வீட்டு வாடகை, செலவுகளெல்லாம் கொடுக்கமுடியாமல் போய்விடுமென்ற நிலைமை.
இதேபோலவே பல வெளிநாட்டவர்களும் தமது நாடுகளில் தமது உறவினர்களை ஆஸ்ரேலியாவுக்குக் கூப்பிட முடியாத நிலைமை. ஆஸ்ரேலியாவின் கொரோனாக் கட்டுப்பாடுகளின்படி மிக நெருங்கிய உறவினர்களையே அங்கு வர அனுமதிக்கலாம்.
முக்கியமாகப் பாட்டனார், பாட்டிகளுக்கும் விசாக்கள் கொடுக்கும்படி கேட்டுச் சுமார் 11,000 கையெழுத்துக்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவைகளுக்குப் பதிலளிக்கும் காலம் கடந்துவிட்டதால் அது நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
“இந்தக் கடும் தொற்றுக் காலத்தில் நாம் எமது ஆஸ்ரேலிய மக்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்,” என்று சொல்லும் உள்ளூராய்ச்சி அமைச்சரகம் பெப்ரவரி 22 இல் உத்தியோகபூர்வமாகத் தமது கட்டுப்பாடுகளை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று அறிவிக்கும் என்று தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்