“இயற்கையின் பன்முகத்தன்மையைப் பேணவேண்டுமானால் மனிதர்கள் பச்சைக்கறிகளை உணவாகக் கொள்ளப் பழகவேண்டும்!”
‘இயற்கையின் பெரும்பாலான அழிவுகள், தேய்வுகளுக்குக் காரணம் மனிதர்களுக்கான உணவுத் தயாரிப்பே. எனவே மனிதர்கள் தமது உண்வுப்பழக்கங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், முக்கியமாக பச்சைக்கறிகளை அதிகமாக உண்பவர்களாக மாறிக்கொள்ளவேண்டும்,’ என்று புதிய ஆராய்ச்சி அறிக்கையொன்று கண்டிப்பாகக் கூறுகிறது.
தற்போதைய நிலையில் உலகின் 28,000 விலங்கு, தாவர இனங்கள் முற்றாக அழியும் நிலைக்கு வந்துவிட்டன. அவைகளில் 86 விகிதமானவை – 24,000 விலங்கு, தாவரங்கள் – அழியப்போகும் காரணம் மனிதர்களின் விவசாய முறைகளே. விவசாயத்துக்கான நிலங்களை ஆட்கொள்ளலும், அந்த நிலத்தில் முன்னரைவிட வேறு தாவரங்களை விவசாயத்தில் ஈடுபடுத்தலுமே கடந்த 10 மில்லியன் வருடங்களை விட வேகமாக இயற்கையில் அழிவேற்பட்டுவரக் காரணம் என்கிறது சத்தம் ஹௌஸ் என்ற பிரிட்டிஷ் ஆராய்ச்சிக் கூடம்.
சர்வதேச விவசாய அமைப்பு, ஐ.நா-வின் உணவுத் தயாரிப்பு மையம், மிருகவதையைத் தடுக்கும் அமைப்பு ஆகிய மூன்றும் மேற்கண்ட ஆராய்ச்சியைச் சுட்டிக்காட்டி உலக அரசுகள் தத்தம் நாட்டின் உணவுத் தயாரிப்பு, விவசாயத்தின் வழிவகைகளை மாற்றிக்கொள்ளவேண்டுமென்று அறைகூவல் விடுத்திருக்கின்றன. உணவுத் தயாரிப்பை மேலும் அதிகரித்தால் மனித குலத்தின் பிரச்சினைகள் தீருமென்று எண்ணிச் செயற்படுவது அதற்கு நேரெதிரான விளைவுகளையே தருமென்று எச்சரிக்கப்படுகிறது.
சமீபகாலத்தில் உலகம் குறைந்த செலவில் அதிக உணவுத் தயாரிப்பு என்ற வழியில் இறங்கியதால் அதிக உரம் பாவித்தல், குறிப்பிட்ட சில தாவரங்களை அதிகம் விளைவித்தல், அதிக விவசாய நிலம், அதிக நீரை உபயோகித்தல் போன்றவைகள் தான் உலகம் இன்று எதிர்நோக்கிவரும் காலநிலை மாற்ற அழிவுகள், ஆரோக்கியக் குறைவு, பெருந்தொற்றுக்கள் போன்றவைக்குக் காரணம் என்று விளக்குகிறது மேற்கண்ட ஆராய்ச்சி முடிவு.
சாள்ஸ் ஜெ. போமன்