‘கைவசமிருக்கும் 1.5 மில்லியன் அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளை விற்கத் தயார்,’ என்கிறது தென்னாபிரிக்கா.
தென்னாபிரிக்கா அடுத்த வாரம் தனது நாட்டில் ஆரம்பிக்கவிருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுத்தலில் இதுவரை எந்த நாட்டிலும் பாவனைக்கு எடுக்கப்படாத ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பு மருந்தைப் பாவிக்கவிருப்பதாக அறிவிக்கிறார் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் ஸிவேலி மக்கேஸி.
“ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின் மருந்து இன்னும் தென்னாபிரிக்காவில் பாவிப்புக்காக அனுமதிக்கப்படாவிட்டாலும் 44,000 பேரிடையே தென்னாபிரிக்கா, தென்னமெரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரிசீலனை செய்யப்பட்டிருக்கிறது,” என்கிறார் அவர்.
அந்த நாடு ஏற்கனவே வாங்கியிருக்கும் அஸ்ரா செனகாவின் 1.5 மில்லியன் மருந்துகளை வேறேதாவது நாட்டுக்கு விற்க, அல்லது கொடுத்து வேறு மருந்தை மாற்றிக்கொள்ளப்போவதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அந்த மருந்துகள் ஏப்ரல் 30 திகதிக்கு முன்னர் பாவிக்கவேண்டியவையாகும்.
இந்த வருட இறுதிக்குள் நாட்டின் 40 மில்லியன் மக்களுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கவேண்டும் என்பது தென்னாபிரிக்காவின் குறியாகும். அவர்கள் மொடர்னா, சினோபார்ம், ஸ்புட்நிக் V மற்றும் pfizer/biontech தடுப்பு மருந்துகளை வாங்கத் தயாரென்று அமைச்சர் அறிவிக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்