புதிய சுகாதாரப் பாஸ் சட்டத்துக்கு சிறு திருத்தங்களுடன் அங்கீகாரம் பிரான்ஸ் அரசமைப்புச் சபை தீர்ப்பு

கட்டாய தனிமை, தொழில் பறிப்பு இரண்டையும் அது நிராகரித்தது!

அரசினால் முன்வைக்கப்பட்ட புதியசுகாதாரச் சட்டத்தை நாட்டின் அதி உயர் நீதி பீடமாகிய அரசமைப்புச் சபை (le Conseil constitutionnel) சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளது. வைரஸ்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவரை பொலீஸ் கண்காணிப்புடன் பத்து நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைத்திருத்தல், சுகாதாரப் பாஸ் வைத்திருக்காத காரணத்துக்காகப் பணியாளர் ஒருவரது வேலை ஒப்பந்தத்தை (contracts) ரத்துச் செய்வதற்குத் தொழில் வழங்குநருக்கு அதிகாரம் அளிப்பது ஆகிய இரண்டு விதிகளைத் தவிர பெரும்பாலான ஏனைய விதிகள் அனைத்தையும் அரசமைப்புச்சபை உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசிஏற்றுவதைக் கட்டாயமாக்குதல், உணவகங்கள், சினிமா, வணிக நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்குச் செல்லவும் நீண்ட தூர ரயில் பயணங்களுக்கும் சுகாதாரப் பாஸைக் கட்டாயமாக்குகின்ற விதிகள் உட்பட சர்ச்சைக்குரிய ஏனைய பல விதிகளை அரசமைப்புச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

மருத்துவமனைகளுக்குள் செல்வோருக்கும் பாஸ் அவசியம் என்ற விதியும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.சுகாதாரப் பாஸைக் காரணம் காட்டித்தொழிலைப் பறிப்பதை அரசமைப்புச் சபை தடுத்துள்ள போதிலும் பாஸ் வைத்திருக்காத காரணத்துக்காக பணியாளர்ஒருவர் பணியில் இருந்து சம்பளம் இல்லாமல் இடைநிறுத்தப்படுவதற்குச்சட்டத்தில் இடம் உள்ளது.

தொற்று நோயையும் தனிமனித அடிப்படைச் சுதந்திரங்களையும் ஒரே தட்டில்வைத்து மதிப்பிடவேண்டிய ஒரு நெருக்கடியான நிலையில் சுகாதாரச் சட்டங்கள்நாட்டின் அரசமைப்புச் சட்டங்களை மீறுகின்றனவா என்ற கேள்விகளுக்கு பதில்வழங்கும் பெரும் பொறுப்பு அரசமைப்புச்சபையிடமே உள்ளது. அந்த வகையில்மக்ரோன் அரசின் தொற்று நோய்த்தடுப்பு முகாமைத்துவம் தொடர்பில் அதன் இன்றைய தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவத்துடன் எதிர்பார்க்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுகாதாரச் சட்ட விதிகளைப் பரிசீலிப்பதற்கு ஒன்பது நீதியரசர்கள்கொண்ட அரசமைப்புச் சபை வழமையாக ஒருமாத காலத்தை எடுப்பது வழக்கம். ஆனால் இம்முறை டெல்ரா வைரஸ் தொற்றின் தீவிரம் கருதி – அரசமைப்பில் உள்ள சில சரத்துகளின் அடிப்படையில் – அவசரமாக எட்டு நாட்களில் பரிசீலித்துத் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது.”சட்ட விதிகள் பொதுச் சுகாதாரத்துக்கும்தனிமனித உரிமைகளுக்கும் இடையேசமச்சீரான பரிமாற்றங்களைக் கொண்டுள்ளன” – என்று அரசமைப்புச் சபைஅதன் தீர்ப்பில் கூறியுள்ளது. மக்களதுசுகாதாரப் பாதுகாப்பைப் பேணுவதன் ஊடாக அரசமைப்பை மதிக்கும் வழிமுறையையே நாடாளுமன்றம் முன்னெடுத்துள்ளது என்றும் அது சுட்டிக்காட்டி உள்ளது.

சுகாதாரச் சட்டம் அரசமைப்புச் சபையால்ஏற்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை அடுத்து அந்தச் சட்ட விதிகள் முன்னர் அறிவித்தவாறு எதிர்வரும் 9 ஆம்திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

கட்டாய தடுப்பூசி, கட்டாய சுகாதாரப் பாஸ் என்பவற்றை உள்ளடக்கிய இந்தப் புதிய சுகாதாரச் சட்டத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடைசியாகக் கடந்த சனியன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டனர். புதிய சட்டத்தை “சுகாதார சர்வாதிகாரம்” என்று கூறிக் கடுமையாக எதிர்த்து வந்தவர்கள்அதன் மீதான அரசமைப்புச் சபையின் தீர்ப்பை ஆவலாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தீர்ப்பு அவர்களுக்குப் பெரும்ஏமாற்றமாக அமைந்துள்ளது.

– பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *