நாஸிகளின் அழிப்பு முகாமில் வேலை செய்து 10,000 பேரைக் கொன்றதில் பங்குபற்றியதாக 95 வயது மாது ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.
தற்போது 95 வயதான ஒரு ஜேர்மன் மாது இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில் நாஸிகளின் இன அழிப்பு [Stutthof concentration camp] முகாமொன்றில் காரியதரிசியாகவும், தட்டச்சாளராகவும் வேலை செய்ததாகவும் அங்கே கொல்லப்பட்ட 10,000 பேரின் கொலைகளில் பங்குபற்றியதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஸ்டுத்தொவ் முகாம் போலந்தில் இருந்தது.
ஜேர்மனியைச் சேர்ந்த அந்த மாது யாரென்று அடையாளம் காட்டாமல் ஹம்பேர்க்குக்கு அருகிலிருக்கு நகரொன்றின் அரச வழக்கறிஞர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பெண் அச்சமயத்தில் 21 வயதுக்குக் குறைந்தவராக இருந்ததால் வழக்கு இளவயதினருக்கான நீதிமன்றத்தில் பதியப்பட்டிருக்கிறது.
1939 இல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்டுத்தொவ் முகாமில் போலந்தைச் சேர்ந்த பார்ட்டிசான் போராளிகளும், கைப்பற்றப்பட்ட ரஷ்ய இராணுவத்தினரும் வைக்கப்பட்டிருந்தார்கள். 1943 – 1945 காலத்தில் அங்கு வேலைசெய்த அப்பெண் அங்கு நடந்த கொலைகளைத் திட்டமிட்டு ஒழுங்குசெய்து உதவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் அரச வழக்கறிஞர்.
அந்த முகாமில் ஸிகிளோன் B என்ற நச்சுக் காற்றைப் பாவித்து அங்கேயிருந்த கைதிகள் பலவீனமானபின் கொலை செய்யப்பட்டார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட பெண்மணி மீதான குற்றங்கள் 2016 ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்