140,000 பேர் கையெழுத்திட்டு ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராஒலிம்ப்பிக்ஸ் ஒழுங்கமைப்புக் குழுத் தலைவரைப் பதவி விலகச் சொல்கிறார்கள்.
“பெண்கள் அளவுக்கதிகமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களை வைத்துக்கொண்டு நிர்வாகக் கூட்டங்கள் நடத்தினால் நேரம் இழுத்துக்கொண்டே போகும். நிர்வாகக் குழுக்களில் பெண்களைச் சேர்ப்பதானால், அவர்களுக்குக் கொடுக்கும் பேச்சு நேரத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்!”
என்று ஒலிம்பிக்ஸ் போட்டித் திட்டங்களுக்கான கூட்டமொன்றில்ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராஒலிம்ப்பிக்ஸ் ஒழுங்கமைப்புக் குழுத் தலைவர் யொஷிரோ மோரி குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊடகமொன்று அவரது வார்த்தைகளை பிரசுரித்ததால் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இலவசமகப் பங்குபற்றுகிறவர்களில் 390 பேர் விலகிவிட்டார்கள், மேலும் 140,000 பேர் கையெழுத்துப் போட்டு மோரியைப் பதவி விலகும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
விடயம் வெளியே வந்ததும் அவசரமான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டிய மோரி தனது வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறார். 83 வயதான மோரி 2000 – 2001 இல் யப்பானின் பிரதமராகப் பதவி வகித்தவராகும். தான் குறிப்பிட்ட கருத்துக்கள் ஒலிம்பிக்ஸ் கோட்பாட்டுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார். அவர், தான் குறிப்பிட்ட வார்த்தைகளை உண்மையிலேயே நம்புகிறாரா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “அவர்கள் சொல்பவற்றுக்கு நான் இப்போதெல்லாம் அதிகமாகக் காது கொடுப்பதில்லை, எனவே, அதைப்பற்றி எந்தவிதக் கருத்தையும் சொல்ல நான் விரும்பவில்லை,” என்று பதிலளித்திருக்கிறார்.
மோரியின் கருத்துக்களை அத்துடன் தவிர்த்துவிடவேண்டுமென்று ஒலிம்பிக்ஸ் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டிருந்தாலும் சமூகவலைத்தளங்களில் அவருக்கெதிராகப் பெரும் விமர்சனம் உண்டாகியிருக்கிறது. ஒலிம்பிக்ஸ் ஜோதியுடன் ஓடவிருந்தவர்களில் விளையாட்டு வீரர்கள் இருவர் கூட அதிலிருந்து விலகிக்கொண்டார்கள்.
வெள்ளியன்று நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் நிர்வாகிகள் கூட்டமொன்றில் மோரி பங்குபற்றித் தனது கருத்துக்களுக்கு விளக்கமளிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
கடைசியாக ஜப்பானிலிருந்து வெளிவரும் செய்திகளிலிருந்து மோரி நாளை, வெள்ளியன்று தனது பதவியிலிருந்து விலகிக்கொள்வாரென்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்