ஷின்சியாங் சீர்திருத்த முகாம்கள் பற்றியப் பொய்ச் செய்திகளைப் பரப்பியதாக பி.பி.சி – சீனாவில் தடை செய்யப்பட்டது.
சீனாவின் சிறுபான்மை இனத்தவர்களில் ஒருவரான ஊகூரர்களை கம்யூனிஸக் கோட்பாடுகளில் ஊறவைப்பதற்காகக் கட்டாய முகாம்களில் சிறைவைப்பது பற்றி பிபிசி உட்படப் பல ஊடகங்களும் எழுதி வருகின்றன. அம்முகாம்களில் அடிமை வேலை, முஸ்லீம் பெண்கள் மீதான கற்பழிப்புகள் போன்றவை அதிகாரிகளால் திட்டமிட்டுப் பிரயோகிக்கப்படுவதாகச் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பிபிசி விபரித்திருந்தது.
அதைத் தவிர ஹொங்கொங்கில் சீனா அறிமுகப்படுத்திவரும் புதிய கட்டுப்பாடுகள், கொரோனா கிருமிகள் சீனாவில்தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டன போன்ற கட்டுரைகளையும் சீன அரசு விரும்பவில்லை. அவைகள் சீனாவைப் பற்றிய பொய்ச் செய்திகள் என்றும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளைச் சீனா கடுமையாக வெறுக்கிறது என்றும் சீன அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
மேற்கண்ட விமர்சனங்கள் காரணமாகத் தெரிவிக்கப்பட்டாலும் பிபிசி சீனாவில் முழுவதுமாகத் தடுக்கப்படுவதற்குக் காரணமாக ஒரு வாரத்துக்கு முதல் பிரிட்டன் அரசால் CGTN ஊடகங்கள் மூடப்பட்டதைக் குறிப்பிடலாம். சீனாவில் அந்த ஊடகம் நாட்டின் ஒரே கட்சியாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்புள்ளது என்ற காரணம் காட்டி பிரிட்டனில் மூடப்பட்டுவிட்டது.
பிபிசி ஊடகங்கள் பெரும்பாலும் சாமான்யச் சீனருக்குக் கிடைப்பதில்லை. ஆனால், இனிமேல் ஸ்டிரீமிங் நிகழ்ச்சிகள், ஹோட்டல்கள் போன்றவைகளிலும் தடை செய்யப்படும் என்று தெரிகிறது.
சீனாவின் அடுத்த நகர்வாக பி.பி.சி வியாழன் இரவு முதல் ஹொங் கொங்கிலும் தடை செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனா தனது புதிய வருடத்தைக் கொண்டாடுவதுடன் பிபிசி உலகச் செய்திகள் சீனாவின் பகுதியான ஹொங் கொங்கின் மக்கள் ஊடகச் சேவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
சீனாவின் இந்த நடவடிக்கைகளை “நாட்டு மக்களின் செய்திகளை அறியும் சுதந்திரத்தில் செய்யப்படும் ஒரு தவறான குறுக்கீடு,” என்று பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்