அல் – ஹத்தூல் குடும்பத்தினர் லுஜைனின் விடுதலைக்குக் காரணம் ஜோ பைடனே என்று நன்றி தெரிவிக்கிறார்கள்.
எவரும் எதிர்பாராதவிதமாக சவூதி அரசால் சமீபத்தில் நீண்டகாலச் சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்பட்ட லூஜைன் அல் – ஹத்தூல் நேற்று விடுவிக்கப்பட்டார் என்ற செய்து உலகமெங்கும் பரவியது. சவூதி அரேபியாவின் பெண்களை அங்குள்ள ஆண்கள் அடிமைகள் போன்று நடத்தப்படுவது நிறுத்தப்படவேண்டுமென்று போராடியவர் லூஜைன்.
மனித உரிமைகளுக்காக, முக்கியமாகப் பெண்களுக்காகச் சில முக்கிய உரிமைகளை முன்வைத்துப் போராடிய லூஜைனின் சில கோரிக்கைகள் சமீப காலத்து சவூதி அரேபிய அரச கோட்பாட்டுப் பாதை மாறல்களால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனாலும், உலக நாடுகளால் அறியப்பட்ட லூஜைனை “அரச குடும்பத்தைக் கவிழ்க்கப் போராடியவர்,” என்று குற்றஞ்சாட்டி உள்ளே தள்ள அரசு தயங்கவில்லை.
இதுபற்றி ஒரு இணைய நேர்காணலில் லூஜைனின் சகோதரி ஆலியா “எனது சகோதரி விடுதலை செய்யப்பட்டதற்காக நான் ஜனாதிபதிக்கு நன்றி சொல்கிறேன். இதற்கு முந்தைய அரசின் பதவிக்காலத்தில் கைது செய்யப்பட்ட லூஜைன் இந்தப் புதிய அரசின் பதவியேற்பையடுத்து விடுவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது,” என்று குறிப்பிட்டார்.
லூஜைன் விடுதலை செய்யப்பட்டது பற்றிச் சவூதிய அரசிடமிருந்து எவ்வித அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை. அவர் விடுதலை செய்யப்பட்டாலும் எவ்வித ஊடகங்களிலும் கருத்துத் தெரிவிக்காமல் இருக்கும்படி வாய்ப்பூட்டுப் போடப்பட்டிருப்பதாகவும், மீறும் பட்சத்தில் மீண்டும் புதிய சிறைத்தண்டனை கொடுப்பதாக மிரப்பட்டட்டிருப்பதாகவும் குடும்பத்தினர் குறிப்பிடுகிறார்கள். லூஜைனும், குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்குப் பயணமாவதும் தடுக்கப்பட்டிருக்கிறது.
“ஒரு சரியான முடிவு,” என்று ஜோ பைடன் லூஜைனின் விடுதலை பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்