அமெரிக்க அரசியலில் ரிபப்ளிகன் கட்சியிலிருந்து பிளவடைந்தவர்கள் மூன்றாவது சக்தியாக உருவெடுப்பார்களா?
பதவியிலிருந்து விலகிய டொனால்ட் டிரம்ப்பின் நிழல் தொடர்ந்து ரிபப்ளிகன் கட்சியின் மேல் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. அதன் விளைவாக சுமார் 120 ரிபப்ளிகன் கட்சி முக்கியஸ்தவர்கள் கூடி நடாத்திய மாநாட்டில் புதியதொரு கட்சி தொடங்குவது பற்றி ஆராய்ந்தார்கள்.
டிரம்ப்பின் ஆட்சி அதிகாரங்களுக்குள்ளிருந்து விலகியவர்களும், அதற்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த புஷ், ரீகன் ஆகியோரின் ஆட்சியில் முக்கிய இடங்களை வகித்தவர்களுமான ரிபப்ளிகன் கட்சிக்காரர்களே அமெரிக்க அரசியல் மைதானத்துக்குள் புதியதொரு வலதுசாரி – மத்திய கோட்பாட்டுக் கட்சியை ஸ்தாபிக்கலாமா என்று சிந்தித்து அதற்கான ஆதரவைத் தற்போது பதவிகளிலிருக்கும் ரிபப்ளிகன் கட்சிக்காரிடையே வலைவீசி வருபவர்களாகும்.
தற்போது பாராளுமன்ற அங்கத்துவர்களாக இருப்பவர்களிடையே புதிய கட்சி ஏற்படுத்தும் எண்ணம் பெரிய ஆர்வத்தை ஏற்படுதுவதாகத் தெரியவில்லை. செனட் சபைக்குள்ளிருந்து அரசமைப்புச் சட்டங்களுக்கெதிராக நடந்த டிரம்ப்பைத் தண்டிப்பதற்காகக் குரலெழுப்பி வரும் முக்கியஸ்தவரான லிஸ் சேனியும் அவரது ஆதரவாளர்களும் கட்சியை உடைப்பதை எதிர்க்கிறார்கள்.
அமெரிக்க அரசியலில் இதுவரை இரண்டு கட்சிகள்தான் இருந்து வந்திருக்கின்றன. மூன்றாவது கட்சியை அமைப்பதானால் அதற்கான அடித்தளம், பணம், கட்சி அமைப்புக்கள் தவிர ஒரு பலமான ஈர்ப்புச் சக்தியுள்ள தலைமையும் வேண்டும். அப்படியான விடயங்களில் புதிய கட்சி ஆரம்பித்து வலதுசாரிக் கோட்பாட்டிற்கு ஆதரவாளர்களைச் சேர்க்க பல்லாண்டுகளாகலாம் என்றே பலரும் சிந்திக்கிறார்கள்.
ரிபப்ளிகன் கட்சி உடைந்து இரண்டு கட்சிகளாகுமானால் விளைவு டெமொகிரடிக் கட்சியினர் மீண்டும், மீண்டும் வரவே வழியமைத்துக் கொடுப்பதாகவும் இருக்குமென்று பதவியிலிருக்கும் தற்போதைய கட்சி முக்கியஸ்தவர்கள் எண்ணுகிறார்கள். அத்துடன் டிரம்ப்புக்கு இருக்கும் ஆதரவாளர், கட்சி நிதி, நிறுவனங்களின் உதவி போன்றவையுடன் அவர்களது பாகமே அதிக பலனடையுமென்றும் பயப்படுகிறார்கள்.
புதிய கட்சி ஆரம்பிப்பதை விட உள்ளிருந்தே கட்சியைப் படிப்படியாக மாற்றி டிரம்ப்பின் நிழலிருந்து விலகிக் கட்சியைப் புதுப்பிக்கவேண்டும் என்ற குரல் பலமாக ஒலிப்பதாகத் தெரிகிறது. கட்சிக்கு நிதி கொடுப்பவர்களும், டிரம்ப்புடன் அதிகாரத்தில் தோள் கொடுத்தவர்களும் பெரும்பாலும் அவரது கையாளல்களால் அலுத்துப்போயிருக்கிறார்கள். காலப்போக்கில் அவர்கள் தம்மை டிரம்ப்பின் பிடியிலிருந்து விலக்கிக்கொள்வார்கள் என்றும் நம்பப்படுகிறது.
எதுவாயினும் ரிபப்ளிகன் கட்சிக்குள்ளே கடுமையான வாதப் பிரதிவாதங்களும், நகர்வுகளும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்