ரிஹானாவின் தயாரிப்புக்கள் ஜார்காண்டில் குழந்தைகளின் வாழ்வைப் பாழடிப்பதாகக் குறிப்பிட்டு போராட்டம்.
பிரபல இசைத் தாரகை ரிஹானாவுக்கெதிராக இந்தியாவின் ஜார்காண்டின் குழுவொன்றினால் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. Fenty Beauty என்ற ரிஹானாவின் அழகுசாதனப் பொருட்கள் சிறுவயதினரைச் சுரங்க வேலைக்குப் பாவிக்கும் நிறுவனத்தின் பொருட்களைப் பாவிப்பதாகக் குறிப்பிட்டு பல்பொருள் அங்காடிக் கட்டடமொன்றின் முன்னால் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
Fenty Beauty பிரெஞ்சு நிறுவனமான ஸெபோராவால் சந்தைப்படுத்தப்படுகிறது. அந்த நிறுவனம் மிகா என்றழைக்கப்படும் ஜார்காண்ட் சுரங்கங்களில் எடுக்கப்பட்ட இரசாயணப் பொருளைப் பாவிக்கின்றன. அச்சுரங்கங்களில் லட்சக்கணக்கான வயதுக்கு வராதவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அந்த நச்சு இரசாயணத்தை உறிஞ்சும் அச்சிறார்களின் வாழ்வு பாழாகிறது என்பதே எதிர்ப்பை நடத்தும் ஜாவேத் மாலிக்கின் வாதமாகும்.
சேவா சன்ஸ்கார் பவுண்டேஷன் என்ற அமைப்பின் தலைவர் ஜாவேத் மாலிக் சில நாட்களுக்கு முன்னர் ரிஹானா இந்தியாவின் புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தை இந்தியாவுக்கு எதிரானது என்று குறிப்பிடுகிறார். சர்வதேச ரீதியில் இளவயதினரிடையே அப்போராட்ட்டம் பற்றிய விழிப்புணர்வைக் கொடுத்திருப்பதால் பா.ஜ.க ஆதரவாளர்கள், உயர் மட்ட அமைச்சர்கள் பலரும் ரிஹானாவைத் தாக்கி வருகிறார்கள்.
அது மட்டுமன்றி ரிஹானாவின் அழகுச் சாதனங்கள் ஜார்காண்டிலிருந்து மிகாவைப் பாவிக்கின்றனவா என்பது பற்றிய ஒரு விசாரணையையும் முடுக்கி விட்டிருக்கிறார்கள். அவ்விசாரணைகள் இந்தியாவின் பாலர் பாதுகாப்புச் சட்டத்தின் வரையறைகள் பற்றி ஆராய்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்