அரசுக்கெதிராகப் போராடிவந்த விவசாயிகளின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவிசாய்க்க வேண்டியதாயிற்று.

டெல்லியையும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் ஒரு வருடத்தும் அதிகமாக வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் மோடி அரசுக்கு எதிராகப் போராடி வந்த விவசாயிகளின் அமைப்புக்களின் கோரிக்கையைத் தான் ஏற்றுக்கொண்டதாக பிரதமர் அறிவித்திருக்கிறார். அரசால் அந்த விவசாயிகளை மனம் மாற்ற முடியாத காரணத்தாலேயே குறிப்பிட்ட மூன்று சட்ட மாற்றங்களும் வாபஸ் பெறப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சீக்கியர்களின் குருவான குரு நானக்கின் நினைவு நாளில் நாட்டு மக்களுக்கு உரையளித்தபோதே மோடி அதைக் குறிப்பிட்டார். விவசாயிகளுடைய வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கான செலவைஅரசு வரவு செலவுத் திட்டத்தில் ஐந்து மடங்காக உயர்த்தியிருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் கொண்டுவரப்பட்ட குறிப்பிட்ட மூன்று சட்டங்களும் சிறு விவசாயிகளுக்கு உதவவே அறிமுகப்பட்டன என்றும் அவைகளைப் பின்வாங்குவது வேதனைக்குரியது என்றும் அவர் நொந்துகொண்டார்.

முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் மற்றும் விவசாயிகளின் சங்கங்கள் மோடியின் நடவடிக்கையை வரவேற்றிருக்கின்றன. ஆனால், மோடி குறிப்பிட்டபடி வரவிருக்கும் பாராளுமன்றக் கூடலின்போது அந்தச் சட்டங்கள் பின்வாங்கப்படும்போதுதான் தாம் தமது போராட்ட நடவடிக்கைகளைக் கைவிடுவோம் என்கிறார்கள் விவசாயிகள் சங்கங்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்