தமது நாடுகளுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் தேவையில்லையென்று தன்சானியாவுக்கு அடுத்ததாக புருண்டியும் அறிவித்திருக்கிறது.
கடந்த மாதத்தில் புருண்டி நாட்டின் நீர், நில எல்லைகளெல்லாம் கடந்த மாதம் மூடப்பட்டன. சுமார் 1,600 பேர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
“நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களில் 95 % பேர் குணமாகி வருகிறார்கள். நோய் வராமல் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுப்பதே அவசியம். தடுப்பு மருந்துகள் எங்களுக்குத் தேவையில்லை,” என்று நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
நாட்டின் ஜனாதிபதி “எங்கள் நாட்டில் புதிய கொவிட் 19 நோயாளிகள் உருவாவதற்குக் காரணம் கடவுளின் தண்டனையே. நாட்டின் தலைவர்கள் தாம் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றாததால் கடவுள் தண்டிக்கிறார். தண்டிக்கப்படும்போது குடும்பத்தில் எல்லோருமே பாதிக்கப்படுவார்கள்,” என்று குறிப்பிட்டார்.
தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன் மங்குபுலி “எங்கள் நாட்டு மக்களைக் கடவுள் கொவிட் 19 லிருந்து காப்பாற்றிவிட்டார். இங்கே அந்த வியாதி அழிக்கப்பட்டுவிட்டது,” என்கிறார்.
நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சரும் “எங்கள் நாட்டில் அந்தப் பெருவியாதி அழிக்கப்பட்டுவிட்டது, எனவே எங்களுக்குத் தடுப்பு மருந்துகளை வரவழைக்கும் திட்டம் இல்லை,” என்று அறிவித்திருக்கிறார். அவர் மக்கள் சுகாதாரமாக வாழ்வது அவசியம் என்றும், நாட்டு வைத்தியங்களிலான கஷாயங்களைக் குடித்துத் தங்களைப் பலப்படுத்திக்கொள்ளவேண்டும், என்றும் குறிப்பிடுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்