முதல் தடவையாக உலக வர்த்தக அமைப்புக்குத் தலைவராக ஒரு ஆபிரிக்கப் பெண் தலைவர் பதவியேற்கவிருக்கிறார்.
டொனால்ட் டிரம்பின் காலத்து வர்த்தகப் போர் வியூகங்களின் காரணமாக முடமாகிப்போயிருக்கும் சர்வதேச அமைப்புகளில் ஒன்று உலக வர்த்தக ஒன்றியம். அமைப்பின் தலைவருக்கான போட்டியில் கடையிசியாக எஞ்சியிருந்த யூ மியூங் ஹீ என்பவரும் பின்வாங்கிக்கொண்டதால் எஞ்சியவர் நைஜீரியரான [Ngozi Okonjo-Iweala] ங்கோசி ஒக்கொன்யோ – இவாலாவாகும்.
நைஜீரியாவின் பொருளாதார அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராகவும் இருந்த 66 வயதான ங்கோசி சுமார் 25 வருடமாக சர்வதேச வர்த்தக அமைப்பில் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்காகப் பணியாற்றியவராகும். கடந்த வருடமளவில் ஒக்டோபர் மாதமளவிலேயே இப்பதவிக்கான போட்டியில் ங்கோசியும் தென் கொரிய வர்த்தக அமைச்சான யூ மியூங் ஹீயுமே மிச்சமிருந்தார்கள். தென் கொரியருக்கே தனது ஆதரவு என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.
சர்வதேச வர்த்தக ஒன்றியம் சீனாவுக்குச் சார்பானது என்று குறிப்பிட்டுப் பல தடவைகள் சாடி வந்த டிரம்ப் பதவி விலகிய பின்னரும் அமெரிக்கா ங்சோசிக்காகத் தனது ஆதரவை அளிக்கவில்லை. ஆயினும் யூ மியூங் ஹீ தானே போட்டியிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டதால் ஜோ பைடன் ங்கோசிக்குத் தனது ஆதரவைக் கொடுக்கவேண்டியதாயிற்று.
தொடர்ந்தும் சீன – அமெரிக்க உறவு சிக்கலாகவே இருக்கப் போகிறது என்ற அரசியல் கால நிலையில் தன்னை ஒரு மாற்றத்துக்கான கருவியாகப் பிரகடனம் செய்திருக்கும் ங்கோசியின் முன்னால் பல சவால்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்