தம்மிடம் வேலை செய்ய வந்த பங்களாதேஷிப் பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக சவூதியர்கள் தண்டிக்கப்பட்டார்கள்
பங்களாதேஷைச் சேர்ந்த 40 வயதான அபிரோன் பேகத்தைக் கொலை செய்ததற்காக சவூதியக் குடும்பத் தலைவி அயேஷா அல் ஜிசானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியா நாட்டில் வேலை செய்தவர்களைக் கொன்றதற்காக தனது குடிமக்களைத் தண்டிப்பது மிகவும் அரிது.
கணவன் பாஸம் சலேமுக்கு மூன்று வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அபிரோனுக்கு மருத்துவ உதவி செய்யாமலிருந்த குற்றத்துக்காகவும், வீட்டுக்கு வெளியே வேறிடங்களில் வேலைக்கு அனுப்பியதற்காகவும் அவன் தண்டிக்கப்பட்டான். கொலையிலும் சித்திரவதைகளிலிலும் ஈடுபட்ட மகன் வலீத் சாலம் இளையவர்களுக்கான சிறைமுகாமுக்கு அனுப்பப்பட்டிருக்கிறான்.
அபிரோன் பங்களாதேஷிலிருந்து ஒரு முகவர் மூலமாகச் சவூதிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். எட்டு அங்கத்தவர்கள் கொண்ட அந்தக் குடும்பத்தில் அவர் வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது மாதமே சித்திரவதைகள் ஆரம்பமாகிவிட்டதாக வீட்டாருடன் கதைக்கும்போது தெரிவித்திருக்கிறார். தன்னை அவர் காப்பாற்றும்படி கேட்க அபிரோனின் குடும்பத்தார் முகவரைத் தொடர்பு கொண்டு உதவிகள் கேட்டும் எதுவும் செய்யப்படவில்லை.
தொடர்ந்தும் வீட்டாருடன் தொடர்பு கொள்ளும்போது அபிரோன் தனக்கு நடக்கும் சித்திரவதைகளைக் குறிப்பிட்டு அதை பங்களாதேஷ் அதிகாரங்களிடம் அறிவிக்கும்படி கேட்டிருக்கிறார். உடலில் அடி உதைகளைத் தவிர அவரது தலையை அடுப்புச் சூளைக்குள் வைத்தும் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. சில காலத்தின் பின் அபிரோனுடன் தொடர்பு அற்றுப்போய்விட்டது.
2019 மார்ச் மாதத்தில் அபிரோன் இறந்துவிட்டதாகத் தகவல் குடும்பத்தாருக்குக் கிடைத்தது. இறந்த உடலை ஆராய்ந்ததில் கொடுமையான சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. சில மாதங்களின் பின்னர் அபிரோனின் உடல் பங்களாதேஷுக்குக் கொண்டுவரப்பட்டது.
சவூதி அரேபியாவில் அபிரோன் வீட்டில் வேலை செய்தவர்கள் மீதான குற்றங்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள் 2020 முதல் நடந்தன. அபிரோன் சார்பில் பங்களாதேஷின் சவூதிய தூதுவரக அதிகாரிகள் பங்கெடுத்தனர். கொலைக்காக இரத்தப் பணம் [திய்யா] எதுவும் வாங்கமாட்டோம் எமக்கு வஞ்சமாகக் கொலையாளி தண்டிக்கப்படவேண்டுமென்று [கிஸாஸ்] அபிரோனின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.
பங்களாதேஷிலிருந்து வருடாவருடம் 700,000 பேர் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சவூதி அரேபியாவிற்கு வேலைக்குச் செல்கிறார்கள். கடந்த ஐந்து வருடங்களில் 500 பெண்களின் இறந்த உடல்கள் பங்களாதேஷுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அவற்றில் 200 உடல்கள் சவூதியிலிருந்து வந்தவையாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்