இரத்தக்கறைகள் மியான்மாரின் வீதிகளில் இரத்த ஆறு ஓடுமா?
பெப்ரவரி முதலாம் திகதியன்று நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசு பதவியேற்க விடாமல் ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் இராணுவத்தின் நடத்தையை மக்கள் தொடர்ந்தும் எதிர்த்து வருகிறார்கள். ஆரம்பத்தில் மக்களின் எதிர்ப்பணிகளை அனுமதித்த இராணுவம் படிப்படியாகத் தன் பிடியை இறுக்கி எதிர்ப்புக்களை நசுக்க ஆரம்பிக்கிறது.
மியான்மார் மக்களின் போராட்டம் நாட்டின் வெவ்வேறு நகரங்களில் நடக்கும் எதிர்ப்பு ஊர்வலங்களுடன் நிற்கவில்லை. மருத்துவ சேவையாளர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் பல பகுதிகளிலும் வேலை நிறுத்தங்கள் செய்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. இதுவரை நாட்டில் பெருமளவில் வன்முறைகளேதும் நடக்கவில்லை.
மியான்மார் இராணுவம் அவ்வப்போது நாட்டின் இணையத் தொடர்புகளை முழுதாகவும், சில நகரங்களிலும் அணைத்துவிடுவதன் மூலம் எதிர்ப்பாளர்களிடையே தொடர்புகளையும், திட்டங்களையும் பரவாமல் தடுக்க முனைகிறது. பெரும் ஊர்வலங்களுக்குத் தடை போடப்பட்டு, அரசியல் எதிர்ப்பாளர்களைத் தமது வீடுகளில் பாதுகாப்பவர்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றியிருக்கிறது.
செவ்வாயன்று முதல் இராணுவம் படிப்படியாகத் தனது நடவடிக்கைகளை அதிகரிப்பதாகவும், வன்முறையில் எதிர்ப்பாளர்களைக் கையாள்வதாகவும் செய்திகள் வெளியாகின்றன. சாதாரண உடையில் மக்களின் எதிர்ப்பு ஊர்வலங்களுக்குள் நுழைந்து மக்களைத் தடியடியால் கலைத்தும், கண்ணிர்ப்புகையால் விரட்டியும் வருகிறது. இப்படியான வன்முறைகள் நாட்டின் சிறிய நகரங்களிலேயே நடந்து வருகிறது. மக்கள் ஆங்காங்கே அவைகளைப் படம் பிடித்து சமூகவலைத்தளங்கள் மூலமாகப் பரப்பிவிடுகிறார்கள்.
சர்வதேசப் பத்திரிகையாளர்கள் இருக்கும் பெரிய நகரங்களில் இராணுவம் இன்னும் கடுமையான வழிகளைக் கையாளவில்லை. நேற்றுமுதல் பெரும்பாலான அரச ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துவிட்டு எதிர்ப்பு ஊர்வலங்களில் பங்கெடுத்து வருவதால், நாட்டில் போக்குவரத்தும், வங்கிச் சேவைகளும் ஸ்தம்பித்து விட்டன.
நாட்டின் தலைவர் ஔன் சன் சு ஷீ மீது ஏற்கனவே சாட்டப்பட்ட இறக்குமதிச் சட்டங்களை மதிக்கவில்லை என்ற குற்றம் தவிர “நாட்டின் பேரழிவுக் காலச் சமயத்தில் மெத்தனமான இருந்தார்,” என்ற குற்றமும் சாட்டப்பட்டிருக்கிறது. அவரது கைது 17ம் திகதி வரை நீட்டப்பட்டிருக்கிறது.
நேற்றுச் செவ்வாயன்று பதவியைக் கைப்பற்றிய பின் முதல் தடவையாக இராணுவம் தனது பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. “அரசியலமைப்புச் சட்டத்தின்படியே பதவியை இராணுவம் தன்வசப்படுத்தியிருக்கிறது. நாட்டில் எதிர்காலத்தில் நிலைமை சீரானபின் தேர்தல் நடாத்தப்படும். எதிர்ப்பு ஊர்வலங்களில் பங்குபற்றுகிறவர்களே ஆங்காங்கே வன்முறைகளிலும், ஒழுங்கீனங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தமக்கு நல்லது எதுவென்று நாட்டு மக்களுக்குப் புரியவில்லை,” என்று அங்கே குறிப்பிடப்பட்டது.
“இராணுவத்தின் நடவடிக்கைகளைக் கவனித்ததில் இன்றைய தினம் அவர்கள் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கி இரத்தக்களரியை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிகிறது. நாடு முழுவதும் மக்கள் இன்று பெரும் ஊர்வலங்களையும், போராட்டங்களையும் நடத்தவிருக்கிறார்கள்,” என்று ஐ.நா-வின் மியான்மாருக்கான பிரத்தியேக தூதுவர் டொம் ஆன்றூஸ் தெரிவிக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்