வெளிநாட்டு மத போதனைகளுக்கு டெனிஸ் மொழிபெயர்ப்பு கட்டாயம்! டென்மார்க்கில் சர்ச்சைக்குரிய சட்டம்
ஐரோப்பாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் பரப்பப்படுவதற்கு மதபோதனை ஒரு பிரதான வழிமுறையாக மாறுவதைத் தடுக்க பல நாடுகளும் கடுமையான சட்டங்களை இயற்றி வருகின்றன.
பள்ளிவாசல்களில் நடத்தப்படுகின்ற மதபோதனைகளைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டு டெனிஸ்(Danish) மொழி தவிர்ந்த ஏனைய வெளிநாட்டு மொழிகளில் நடத்தப்படுகின்ற மத போதனைகள், பிரசங்கங்கள் போன்றவற்றுக்கு இனிமேல் டெனிஸ் மொழி பெயர்ப்பைச் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்குவதற்கு டென்மார்க் அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கான சட்ட மூலம் ஒன்றை டென்மார்க் நாடாளுமன்றம் இந்த மாதம் விவாதிக்க உள்ளது எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
“நீங்கள் எந்த மதத்தவராகவோ எந்த நாட்டவராகவோ இருங்கள். ஆனால் மத போதனைகளில் குழந்தைகளுக்கு என்னத்தைச் சொல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். எனவே வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக உங்களது மத போதனைகளின் டெனிஸ் மொழிபெயர்ப்புப் பிரதி ஒன்றைத் தந்து விடுங்கள்”
இவ்வாறு டென்மார்க் அரசு வெளிநாட்டு மத போதகர்களிடம் கேட்கவுள்ளது.
டென்மார்க்கில் இரண்டு லட்சத்து 70 ஆயிரம் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். பள்ளிவாசல்களில் பொதுவாக அரபு மொழியிலேயே போதனைகளும் பிரசங்கங்களும் நடக்கின்றன. அங்கு என்னவெல்லாம் போதிக்கப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை கிடையாது என்று டெனிஸ் ஆட்சியாளர் கள் கருதுகின்றனர். ஆனால் தனியே முஸ்லிம்களைக் குறி வைத்து சட்டம் இயற்ற முடியாது. எனவே எல்லா வெளிநாட்டு மாதங்களுக்கும் பொதுவானதாகப் புதிய சட்ட வரைபைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத சுதந்திரத்தைக் கண்காணிக்கின்ற அந்தச் சட்டத்துக்கு டென்மார்க்கில் உள்ள பல்வேறு மத சமூகத்தவர்களிடையே பலத்த எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. குறிப்பாக டென்மார்க்கில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அங்கிலிக்கன் திருச்சபை முதல்வர்கள் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிறுபான்மை மதக் குழுக்களைப் பாதிக்கின்ற இந்த நடவடிக்கை எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் டென்மார்க் அரசு அதனைக் கைவிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிவருகின்றனர்.
எல்லா மதப் பிரசங்கங்களும் போதனைகளும் முன்கூட்டியே எழுத்து வடிவில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகின்ற சில மதகுருமார்கள், வாய் மூலமாகச் சொல்லப்படுகின்ற எல்லாவற்றையும் மொழி பெயர்த்து வழங்குவது நடைமுறைச் சாத்தியம் அற்றது என்று கூறுகின்றனர்.
ஆனால் பிரதமர் மெற் பிறெட்றிக்சன் (Mette Frederiksen)அம்மையாரது கட்சி நாட்டில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஒடுக்குவதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது.
டென்மார்க்கின் சனத் தொகையில் 90 வீதமானவர்கள் டெனிஸ் மொழி பேசுபவர்கள் ஆவர். டெனிஸ் மட்டுமே நாட்டின் உத்தியோக பூர்வ மொழி ஆகும். எஞ்சிய பத்து வீத சிறுபான்மையினரில் Faroese என்கின்ற ஜேர்மனிய மொழி மற்றும் Greenlandic போன்ற பிற மொழிகளைப் பேசுவோர் அடங்குவர்.[கிரீன்லாந்து, பாரோ தீவுகள் டென்மார்க்கின் பாகங்களே.]
குமாரதாஸன். பாரிஸ்.