ஜப்பானின் லிபரல் டெமொகிரடிக் கட்சி ஐந்து பெண்களைக் கட்சி நிர்வாகக் குழுவில் சேர்க்கத் தயார் என்கிறது.
ஜப்பானின் பழம்பெரும் அரசியல் கட்சி ஆளும் கட்சியான லிபரல் டெமொகிரடிக் கட்சி. 1955 ம் ஆண்டிலிருந்து பெரும்பாலும் ஆண்டு வரும் இக்கட்சி தனது நிர்வாக சபையில் மேலும் ஐந்து பெண்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது, ஒரு நிபந்தனையுடன்.
லிபரல் டெமொகிரடிக் கட்சிப் பொதுச்சபையில் 25 அங்கத்தவர்களுண்டு. அவர்களில் மூவர் பெண்கள். நிர்வாகக் குழுவின் 12 அங்கத்தவர்களில் இருவர் மட்டுமே பெண்கள். அங்கே பெண்களின் இலக்கத்தை அதிகரிக்கவே வித்தியாசமாகச் சிந்திக்கிறது அக்கட்சி.
நிர்வாகக் குழுக் கூட்டங்களில் வாய்திறக்காமல் கலந்துகொண்டு, நடப்பதைக் கவனித்து அவர்கள் முடிவுகளைத் தீர்மானிக்கும் பாணியைக் கற்றுக்கொள்வதானால் ஐந்து பெண்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார் பொதுக் காரியதரிசி தொஷிஹீரோ நிக்காய். 82 வயதான அவர் கட்சித் தலைமையில் பெண்கள் குறைவாக இருப்பதாக விமர்சனம் வருவதால் இப்படிச் செய்யலாம் என்கிறார்.
சமீபத்தில் ஜப்பானின் ஒலிம்பிக் திட்டக்குழுவின் தலைவர் யொஷீரோ மோரி “பெண்களைக் கட்சிக் கூட்டங்களுக்குள் விட்டால் அனாவசியமாகப் பேசிக்கொண்டேயிருப்பார்கள், எவ்வித முடிவையும் எடுக்கமுடியாது,” என்று குறிப்பிட்டு அதனால் ஏற்பட்ட சர்வதேச விமர்சனங்களால் பதவி விலகினார். அவரும் இதே கட்சியின் மூத்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேர்த்துக்கொள்ளப்படவிருக்கும் பெண்கள் நிர்வாகக் கூட்டங்களில் எதையும் பேச முடியாது. என்னென்ன நடக்கிறது என்று கவனித்து அவர்களுடைய கருத்துக்கள் ஏதுமிருப்பின் எழுத்தில் காரியதரிசியின் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என்று பிரேரிக்கிறது கட்சித் தலைமை.
வளர்ந்த நாடாக இருப்பினும் உலக நாடுகளிலேயே நிறுவனங்கள், அமைப்புக்களில் மிகக்குறைந்த பெண்கள் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிலொன்று ஜப்பான். உலகின் 153 நாடுகளில் தலைமைப் பதவிகளில் பெண்கள் இருக்கும் அளவைக் கவனித்தால் ஜப்பான் 121 வது இடத்திலிருக்கிறது. அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் ஜப்பானிய சமூகத்தில் பெண்கள் பங்களிப்பு படு மோசமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்