டுபாய் அரசன், தன் மகளைச் சிறை வைத்திருப்பது பற்றிய கேள்வி சர்வதேச அரங்கில் சூடாகிறது.
எமிரேட்ஸ் இளவரசி லத்திபாவின் சமீபத்தில் வெளிவந்திருக்கும் வீடியோப் படங்களில் தனது தந்தை தன்னை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். நீண்ட காலமாகவே சந்தேகிக்கப்பட்டு வந்த இவ்விடயம் அப்படங்களில் அவர் “எனது உயிருக்கு ஆபத்து,” என்று குறிப்பிட்டிருப்பது பலரையும் எமிரேட்ஸ் அரசனை நோக்கித் திருப்ப வைத்திருக்கிறது.
எமிரேட்ஸில் சுதந்திரமாக வாழமுடியாத லத்திபா தன் வாழ்க்கையிலிருந்து தப்ப 2018 இல் படகொன்றில் வெளியேற எத்தனித்தார். முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூமின் மகளான அவருக்கு உதவியவர் பின்லாந்தைச் சேர்ந்த அவரது நண்பி ரீனா. டுபாயிலிருந்து ஓமான் வழியாகப் படகிலும், நீர் ஸ்கூட்டரிலும் ஓடிச் சர்வதேசக் கடல் பிராந்தியத்தில் அவருக்காகக் காத்திருந்த அமெரிக்காவில் வசிக்கும் பிரெஞ்சுக்காரர் ஒருவரின் உல்லாசக் கப்பலில் ஏறிப் பயணித்தார் லத்தீபா. அந்தப் பயணம் எட்டு நாட்கள் தொடர்ந்தது.
2018 மார்ச் 04 ம் திகதி இந்தியாவின் கோவாவுக்கு வெளியே அந்த உல்லாசக் கப்பல் நுழைந்தபோது இந்தியாவின் இராணுவ அதிரடிப் படையினர் விமானமொன்றில் வந்து அக்கப்பலைக் கைப்பற்றினார்கள். கப்பலில் வேலை செய்பவர்கள் தவிர லத்தீபாவுடன் நண்பி ரீனாவும் இருந்தார்கள். அவர்களைக் கைப்பற்றிய இந்திய இராணுவம் எல்லோரையும் எமிரேட்ஸ் இராணுவத்திடம் ஒப்படைக்க அனைவரும் டுபாய்க்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
டுபாயில் விசாரணைகளுக்குப் பின்னர் கப்பல் ஊழியர்களும், ரீனாவும் விடுவிக்கப்பட்டனர். லத்தீபா “விபரம் தெரியாமல் செய்துவிட்டார். தனது குடும்பத்தினருடன் டுபாயில் வாழ்வதே அவருக்கு நல்லது,” என்று டுபார் அரசன் சார்பில் அறிக்கை விடப்பட்டது. அதன் பின் லத்தீபா பற்றிய விபரங்கள் எதுவும் வெளியே வரவில்லை. அவர் சிறைவைக்கப்பட்டிருக்கவேண்டும் அல்லது கொலை செய்யப்பட்டிருக்கவேண்டுமென்ற கருத்தே பரவலாகச் சந்தேகிக்கப்பட்டது.
அதே ஷேக் முஹம்மதுவின் மனைவிகளிலொருவரான ஹயா பின் அல் ஹுசேன் தனது உயிருக்கும் தனது மகள்மாரின் நல்வாழ்வுக்கும் பயந்து 2019 இல் பிரிட்டனுக்குத் தப்பியோடியிருக்கிறார். அவர் ஜோர்டான் அரசனின் சகோதரியாகும். அப்பிள்ளைகளைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி பிரிட்டிஷ் நீதிமன்றமொன்றில் டுபாய் அரசன் கோரியிருக்கிறார். அதுபற்றிய விசாரணைகளின்போது லத்தீபாவுக்கு நடந்தது பற்றிக் குறிப்பிடவே அவ்விபரங்கள் விசாரிக்கப்பட்டன. அவ்விசாரணைகளின் மூலம் லத்தீபாவின் தப்பியோடலும், கைப்பற்றலும் பற்றிய சகல விபரங்களும் வெளியாயின.
டுபாய் அரசனின் குடும்பத்துடன் பிரிட்டனுக்கு வந்திருந்த லத்திபாவின் மூத்த சகோதரி 2000 ம் ஆண்டு லண்டனில் தப்பியோடினார். ஆனால், பொலீசாருக்கு அறிவிக்காமலே தனது அடியாட்களை வைத்து அவளை ஒரு மாதத்தின் பின்னர் கைப்பற்றினார் முஹம்மது அல் மக்தூம். அவருக்கு மயக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டு டுபாய்க்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு என்ன ஆனது என்பது இதுவரை வெளியே தெரியாது.
தனது சகோதரி சம்ஷாவுக்கு நடந்ததால் பயந்தே வாழ்ந்த லத்தீபா 2002 இல் தனது 16 வயதில் முதலாவது முறையாகத் தப்பியோடினார். அச்சமயம் டுபாயிலிருந்து ஓமானுக்குச் சென்று தப்ப முயன்றார். ஓமானில் கைது செய்யப்பட்டு டுபாய்க்குக் கொண்டு செல்லப்பட்டு மூன்றரை வருடங்கள் தனிமையில் சிறை வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் வெளிவந்திருக்கும் படங்களைப் பார்த்திருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். “அப்படம் ஒரு பெண் மிகவும் ஆபத்தான நிலையில் தன்னுயிருக்குப் பயப்படுவதைக் காட்டுகிறது. அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை அறிந்துகொள்ள முயல்கிறோம்,” என்கிறார் டொமினிக் ராப்.
பிபிசி வெளியிட்டிருக்கும் அப்படங்களை ஆராய்ந்ததில் அவை நம்பிக்கைக்குரியவை என்று தெரிந்தாலும் அவை எடுக்கப்பட்ட கால விபரம் தெரியவில்லை. ஐ.நா-வின் மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவினருக்கும் லத்திபா தன்னைக் காப்பாற்றும்படி வேண்டுகோள் விட்டிருக்கிறார். அவர்களும் அதைக் கவனிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
எமிரேட்ஸிலிருந்து இதுவரை அப்படங்கள் பற்றி எவ்வித கருத்துக்களும் வெளியாகவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்