இமாலயப் பிராந்தியத்தில் அணைகள், மின்சார நிலையங்கள் கட்டுவது பற்றிக் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.
“நிலக்கீழ் பூமித் தட்டுகள் நிலையாக இல்லாமல் அடிக்கடி நகரும் பிராந்தியம் இமாலயத் தொடர். அங்கே பெரிய கட்டடங்களைக் கட்டுவது மிகவும் ஆபத்தானது. வெவ்வேறு விதமான நகர்வுகளினால் ஏற்படும் ஸ்திரமின்மை அப்பகுதி வாழ் மக்களுக்கு ஆபத்துக்களையே உண்டாக்கும்,” என்கிறார்கள் புவியியலாளர்கள்.
சுமார் 10 நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் உத்தர்காண்ட் பிரதேசத்தில் சமோலியில் ஏற்பட்ட இயற்கைச் சேதம் உலகமெங்கும் பேசப்பட்டது. அத்துடன், ஏற்பட்ட மனித இழப்புக்கள், சேதங்கள் அப்பிராந்தியத்தை இந்திய அரசு கையாண்டு வரும் முறைகளைப் பற்றியும் கவனம் எழுந்துள்ளது. பல ஆராய்ச்சியாளர்களின் நீண்டகால எச்சரிப்புக்களை உதாசீனம் செய்து வருவதாலேயே அது போன்ற அழிவுகள் ஏற்படுகின்றன என்பதைப் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்தியாவின் வளர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுக்க எரிசக்தி, மின்சாரம் போன்றவற்றின் தேவைகள் படு வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் சுற்றுப்புற சூழல் அழிவைத் தடுத்து நிறுத்த எரிநெய் இறக்குமதி, நிலக்கரி போன்றவைகளிலிருந்து இந்தியா விடுபட்டே ஆகவேண்டும் என்ற தேவை இருக்கிறது. அதனால் இயற்கையைப் பாதிக்காத வகையில் இயற்கை வளங்களைப் பாவித்துப் பெற்றுக்கொள்ளும் சக்தியைப் பெறுவதில் இந்திய அரசு கவனமெடுத்து வருகிறது.
அணைக்கட்டுகளைக் கட்டி அதன் மூலம் மின்சாரத் தயாரிப்பை அதிகரிப்பது இயற்கை வளத்தைப் பாவிப்பதாகக் கருதப்பட்டாலும் அது இமாலயம் போன்ற மென்மையான பிராந்தியங்களில் இதுவரை நூற்றுக்கணக்கில் கட்டப்பட்டிருக்கின்றன. அவைகள் கட்டப்படும்போது பொறியியல் தொழில்நுட்பத்தைச் சரியான அளவில் பயன்படுத்தவில்லை என்று புவியியலாளர்கள் விமர்சிக்கிறார்கள்.
காலநிலை மாற்றத்தால் வேகமாகப் பாதிக்கப்படும் இமாலயப் பிராந்தியங்களில் நிலக்கீழ் நகர்வுகள் தவிர கடும் மழையால் ஏற்படும் அழிவுகளும் சேர்ந்துகொண்டுள்ளன. எனவே, நவீன பொறியியல், புவியியல் ஆராய்ச்சிகளை மதித்தே மேற்கொண்டு இவ்வகையான அணைக்கட்டுகளில் முதலீடுகள் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்