இஸ்ராயேலிலிருந்து சனியன்று வந்த கொவிட் 19 பற்றிய நற்செய்தியொன்று.
திட்டமிட்டுப் படு வேகமாக நாட்டு மக்களுக்குக் கொவிட் 19 தடுப்பூசிகள் போட்டுவரும் நாடு இஸ்ராயேல். அதன் விளைவால் தொற்றுக்கள் பரவுதல் நாட்டில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இரண்டு ஊசியையும் போட்டுக்கொண்டவர்களிடையே தொற்று 98.9% ஆல் குறைந்திருக்கிறது என்கிறார் இஸ்ராயேலின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர்.
ஜனவரி கடைசியில் Pfizer-Biontech நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளிரண்டும் நாட்டின் 1.7 மில்லியன் பேருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களிடையே நடாத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு இதுவாகும்.
வரவிருக்கும் இரண்டு வாரங்களில் இஸ்ராயேலின் + 49 வயதுள்ளவர்களில் 95 % மக்கள் தடுப்பூசிகளைப் பெறுவார்கள் என்பது திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இன்று முதல் நாட்டில் இதுவரை முடக்கப்பட்டிருந்த சேவைகளில் ஒரு பகுதி திறக்கப்படவிருக்கிறது.
தடுப்பு மருந்துகளிரண்டையும் பெற்றுக்கொண்டவர்களின் விபரங்கள் டிஜிடல் முறையில் பதியப்பட்டிருக்கின்றன. அவைகளை வைத்து இஸ்ராயேல் ஒரு செயலியை உண்டாக்கியிருக்கிறது. அதனைப் பாவித்து பொது நிகழ்ச்சிகளில் தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்கள் பங்குபற்றலாம். ஏனையோர் அவசிய தேவைக்கான இடங்களுக்கு வழக்கம்போலப் போய்வரலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்