சர்வதேச அணுசக்தி கண்காணிப்பாளர்கள் மேலும் மூன்று மாதங்கள் ஈரானைக் கண்காணிக்கத் தற்காலிக அனுமதி.
சர்வதேச ரீதியில் ஈரான் செய்துகொண்ட “அணுச் சக்தி ஆராய்வுகளை நிறுத்துதல்,” ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் விலகிக்கொண்டதால் ஏற்பட்ட கோபம் ஈரானுக்குத் தீரவில்லை. ஒப்பந்தத்தில் ஈரானை மீண்டும் அமெரிக்கா இணைத்துக்கொள்ளாவிடின் தான் நாட்டிலிருக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் ஒத்துழைக்க மாட்டேனென்று அறிவித்திருந்தது.
ஈரான் மீது டிரம்ப் போட்டிருந்த வர்த்தகப், பொருளாதாரக் கட்டுப்பாடுகளை ஜோ பைடன் அரசு நேற்றுக்கு [21.02] முன்னர் நீக்கவேண்டுமென்று ஈரான் காலக்கெடு போட்டிருந்தது. ஜோ பைடன் அரசோ சில வாரங்களுக்கு முன்னர் ஈரான் ஆரம்பித்திருந்த அணுச்சக்தி ஆராய்ச்சிகளை நிறுத்தாததவரை ஒப்பந்தத்துக்குத் திரும்ப முடியாது என்று அறிவித்திருந்தார்.
இதனால் யார் முதலில் இறங்கி வருவது என்ற கௌரவப் பிரச்சினை இரண்டு நாடுகளுக்குமிடையே உண்டாகியிருந்தது. அதன் விளைவாக ஈரான் ஞாயிறு முதல் சர்வதேசக் கண்காணிப்புக் குழுவுக்குத் தாம் ஒத்துழைப்புத் தரப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தது.
கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரபாயேல் க்ரொஸ்ஸி ஞாயிறு ஈரானின் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கடைசி நிமிடத்தில் ஈரான் தனது ஒத்துழைப்புக்கான காலக்கெடுவை மூன்று மாதங்கள் நீடித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்