அரை மில்லியன் பேர் உயிரை அமெரிக்காவில் குடித்திருக்கிறது கொவிட் 19.
வெள்ளை மாளிகையிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் திங்களன்று மக்களை நேரிட்ட ஜோ பைடன் இறந்து போன அரை மில்லியன் அமெரிக்கர்களையும் அவர்களின் உறவினர்களையும் நினைவு கூர்ந்தார். தொற்றுக்களைக் கட்டுப்படுத்த மருத்துவ சேவையினரின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
உலகிலேயே அமெரிக்காவில் தான் கொவிட் 19 ஆல் இறந்தவர்கள் தொகை மிக அதிகமாக இருக்கிறது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள், வியட்நாம் போர் ஆகியவைகளில் இறந்தவர்களின் மொத்தத் தொகையைவிட அதிகானவர்கள் இப்பெருவியாதியால் இறந்திருக்கிறார்கள். சமீப நாட்களில் தொற்றுக்கள், இறப்புக்கள் மெதுவாகக் குறைந்து வருகின்றன.
தினசரி சுமார் 65,000 பேர் தொடர்ந்தும் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒக்டோபர் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக அவ்வெண்ணிக்கை குறைந்திருக்கிறது. இறப்பு, அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் 30 விகிதத்தால் குறைந்திருக்கிறது.
நத்தார், புதுவருட விடுமுறைகளின் பின்பு மக்கள் சந்திப்புக்களைக் குறைத்திருக்கிறார்கள், 13 விகித அமெரிக்கர்கள் ஆகக்குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பவை குறைந்துவரும் தொற்று, இறப்புத் தொகைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்