ஜேர்மனியில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் 70 – 80 வயதினருக்கும் ஒரே சமயத்தில் தடுப்பூசி போடப்படும்.
கொவிட் 19 தடுப்பூசி போடும் ஒழுங்கில் மாற்றம் செய்திருக்கிறது ஜேர்மனி. இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் பிள்ளைகளுக்குத் திறக்கப்பட்டிருக்கும் சமயத்தில் நாட்டின் கொரோனாத் தொற்றுக்கள் குறைவதாக இல்லை என்பதாலேயே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் தடுப்பூசி போடும் ஒழுங்கு முன்போடப்பட்டிருக்கிறது.
நாட்டில் பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமிகள் முன்னரைவிட வேகமானதாகத் தொற்றிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றன. அவைகளை எதிர்நோக்கும் அதே சமயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் வரவழைக்கப்பட்ட தடுப்பு மருந்துகளைச் செலுத்தியும் வருகிரது ஜேர்மனி.
தற்போது மிக வயதானவர்களும், பலவீனமானவர்களும், முதியோர் இல்லங்களில் வாழ்பவர்களுக்கும் தடுப்பு மருந்துகள் கொடுத்தல் நடைபெற்று வருகிறது. அவைகள் மேலும் ஒரு சில வாரங்களின் பின்னரே பூர்த்தியாகும். அச்சமயத்தில் பாடசாலைகள் திறக்கப்பட்டிருப்பதால் ஆசிரியர்களுடைய ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டுமென்ற நிலை உண்டாகியிருக்கிறது.
பாடசாலை மாணவர்களின் வகுப்புக்கள் சிறிதாக்கப்பட்டு, இடைவெளி பேணல், முகக்கவசமணிதல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் பாடசாலைகளில் ஆசிரியர்களின் நிலையை எண்ணி வேகமான பரிசோதனைகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்