வரும் நாட்களில் மீண்டும் ஆஸ்ரேலியர்கள் பேஸ்புக் மூலமாக செய்திகளைப் பார்க்கலாம்.
சுமார் ஒரு வார காலமாக தனது பக்கங்கள் மூலமாகச் செய்திகள் பரிமாற்றங்களைக் காணவிடாமல் தடைசெய்திருந்தது பேஸ்புக். செய்தி நிறுவனங்களுக்குச் சமூக வலைத்தளங்கள் ஒரு தொகையைக் கட்டணமாகக் கொடுக்கவேண்டுமென்று ஆஸ்ரேலிய அரசு சட்டம் கொண்டுவரப்போவதால் கோபமடைந்து பேஸ்புக் இதைச் செய்திருந்தது.
ஆனாலும் தொடர்ந்து நடந்த பேரம்பேசல்களின் பின்னர் பேஸ்புக்கும் ஆஸ்ரேலிய அரசும் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன. இப்புதிய சட்டங்களின் மூலம் சமூகவலைத்தளங்கள் தாம் பிரசுரிக்கும் செய்திகளுக்கான தொகையைக் கொடுக்கவேண்டுமென்ற சட்டத்தை முதலில் அமுல்படுத்தும் நாடாகிறது ஆஸ்ரேலியா.
பேஸ்புக் போலன்றி கூகுள் ஏற்கனவே பல செய்தி நிறுவனங்களுடன் நேரடியாக ஒப்பந்தங்கள் செய்துகொண்டு அவர்களுக்கான தொகையைக் கொடுக்க முன்வந்திருந்தது. பேஸ்புக்கும் அதே வழியில், ஆனால், மேலும் காலம் எடுத்துக்கொண்டு செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்போவதாக உறுதி கூறியிருக்கின்றன. அப்படியான ஒப்பந்தங்கள் செய்துகொண்டு நேரடியாகச் செய்தி ஸ்தாபனங்களுக்கான தொகையைக் கொடுப்பதை நிரூபித்தால் ஆஸ்ரேலிய அரசு சமூகவலைத்தளங்கள் மீது தண்டனை நடவடிக்கைகளில் ஈடுபதாது என்கிறது ஒப்பந்தம்.
ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்தம் சிறிய செய்தி நிறுவனங்களை முழுசாகத் திருப்திப்படுத்தவில்லை என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. பெரிய நிறுவனங்களான பேஸ்புக், கூகுள் போன்றவை ஆஸ்ரேலியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான முர்டொக் நிறுவனம் போன்றவைகளுடன் நேரடியாக ஒப்பந்தங்கள் செய்துகொள்ளுமானால் தமது கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிடும் என்று சிறிய நிறுவனங்கள் அஞ்சுகின்றன.
சமூகவலைத்தளங்கள் மீது இதே போலான கோரிக்கைகள் உட்பட மேலும் பல கோரிக்கைகளும் உலக நாடுகளில் எழுந்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றவை தனித்தனியாக மேலும் கட்டுப்பாடுகளைச் சமூகவலைத்தளங்கள் மீது கொண்டுவரும் எண்ணத்தில் சிந்தித்து வருகின்றன. ஆஸ்ரேலியா எடுத்திருக்கும் நடவடிக்கை ஏற்கனவே கனடாவின் ஆதரவைப் பெற்றிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்