தென் கொரியாவின் பிள்ளைப் பேறு விகிதம் உலகின் படு மோசமானதாக ஆகியிருக்கிறது.
உலகின் சுபீட்சமான நாடுகளில் ஒன்றாக இருப்பினும் தென் கொரியாவின் மக்கள் தொகை வளர்ச்சி நீண்ட காலமாகவே மோசமாக இருந்தது. தனி நபர் சராசரி வருமானத்தில் உலகின் எட்டாவது இடத்திலிருக்கும் கொரியாவில் 2020 இல் குழந்தை பெற்றுக்கொள்ளுதல் மேலும் குறைந்திருக்கிறது.
தென்கொரிய புள்ளிவிபர திணைக்களம் நேற்று, புதனன்று வெளியிட்ட விபரங்களின்படி தென் கொரியாவின் பிள்ளை பிறப்பு 0.84 ஆகக் குறைந்திருக்கிறது. அதன் முதல் வருடத்தில் அது 0.92 ஆக இருந்தது. அதாவது பல வருடங்களாகவே தென் கொரியாவில் பிள்ளைப் பேறு பெருமளவு குறைந்து வருகிறது.
உலக வங்கியின் 180 நாடுகளின் புள்ளி விபரங்களில் பிள்ளை பெறுதல் தென் கொரியாவே இத்தனை மோசமாக உள்ளது. அமெரிக்காவில் அது 1.92 ஆகவும் ஜப்பானில் 1.43 ஆகவும் உள்ளது.
ஆசியாவின் நாலாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் தென் கொரியா, ஆசியாவின் மிக வேகமாக வயதாகிக்கொண்டிருக்கும் மக்களையும் கொண்டிருக்கிறது. கடந்த வருடத்தின் பிள்ளைப் பேறு குறைவாக இருக்கக் காரணம் கொரோனாத் தொற்றுக்களால் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பயம் என்று கருதப்படுகிறது. அதனால் கல்யாணங்களும், பிள்ளைப் பேறுகளும் குறைந்திருக்கின்றன. நாட்டின் தலை நகரான சியோலில் குறைந்தைப் பேறு ஒரு பெண்ணுக்கு 0.64 என்று ஆகியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்