சிரியாவுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொடுத்த அந்த “நட்பு” நாடு எது?
சிரியாவுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைத்திருப்பதாகவும் அவைகள் மேலுமொரு வாரத்தில் நாட்டின் மருத்துவ சேவையாளர்களுக்குக் கொடுக்கப்பட ஆரம்பிக்கும் என்றும் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் ஹசன் கப்பாஷ் தெரிவித்தார். அது எந்த நாட்டால் கொடுக்கப்பட்டவை என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஒரு நட்பான நாட்டால் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அமைச்சர் நாட்டின் பெயரை வெளியிடாததால் அதுபற்றிய ஊகங்கள் ஊடகங்களில் சுழன்றன. சீனாவுடனும், ரஷ்யாவுடனும் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்காக சிரியா பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் அவை இன்னும் முடியவில்லை என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது. தவிர, சீனா அனுப்புவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த 150,000 தடுப்பு மருந்துகள் இன்னும் சிரியாவை அடையவில்லையென்றும் சிரிய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
மூன்று நாட்களுக்கு முன்னர் இஸ்ராயேலில் வெளிவந்திருந்த ஒரு செய்தி நேற்றைய செய்தியுடன் இணைத்துப் பார்க்கப்பட்டது. அது ரஷ்யாவுக்கு 1.2 மில்லியன் டொலர்களை இஸ்ராயேல் கொடுத்து சிரியாவுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதாக இஸ்ராயேல் பத்திரிகையொன்று வெளியிட்ட செய்தியாகும்.
அச்செய்தி பற்றியும், சிரியா தனக்குத் தடுப்பு மருந்து கிடைத்த செய்தியையும் இணைத்து இஸ்ராயேல் பிரதமரிடம் கேள்விகள் போடப்பட்டன. அவர் அதற்காக எந்தப் பதிலையும் சொல்ல மறுத்துவிட்டார். அதுபற்றி இஸ்ராயேலின் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் பாராளுமன்றத்தில் “இஸ்ராயேல் செய்யும் விடயங்கள் பற்றி நாம் இப்போதெல்லாம் ஊடகங்கள் மூலமாகத்தான் தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. பல விடயங்கள் இஸ்ராயேல் மக்களுக்குத் தெரியாமல் மூடி மறைக்கப்படுகின்றன,” என்று விமர்சித்திருந்தார்.
தனது எதிரியாகக் கருதும் சிரியாவுக்கு, தனது அதி முக்கிய எதிரி நாடான ஈரானின் படைகளை நாட்டுக்குள் வைத்துக்கொண்டு இஸ்ராயேலைத் தாக்கும் சிரியாவுக்கு இஸ்ராயேல் ஏன் தடுப்பு மருந்து வாங்கிக் கொடுக்கவேண்டும் என்பது ருசிகரமான கேள்வியாகும்.
அந்தத் தடுப்பு மருந்து ராஜதந்திரத்தின் பின்னால் ரஷ்யா இருப்பதாகத் தெரியவருகிறது. அதன் காரணம் 25 வயதான இஸ்ராயேல் பெண்ணொருவர் காஸா பிராந்தியத்தின் மூலமாக ஜோர்டானுக்குள் நுழைய முயன்றதாகவும், பின்னர் அது வெற்றியடையாமல் கொலான் குன்றுகள் எல்லை வழியாக சிரியாவுக்குள் நுழைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
அந்தப் பெண் எந்தக் காரணத்துக்காக அந்த நாடுகளுக்குள் நுழைந்தார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால், சிரியாவுக்குள் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை ரஷ்யாவின் உதவியுடன் மொஸ்கோவுக்குக் கொண்டுவந்து அங்கிருந்து இஸ்ராயேலுக்கு மீட்க இஸ்ராயேலுக்கு ரஷ்யா உதவியதாகவும் தெரியவருகிறது.
அந்த 25 வயதுப் பெண்ணை விடுவித்ததற்கு நன்றியாகவே இஸ்ராயேல் தனது எதிரி நாட்டவருக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகள் வாங்கிக் கொடுத்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்