“டிரம்ப் தனது வரிகள் பற்றிய விபரங்களை மாநில வழக்கறிஞர்களுக்குக் கொடுக்கவேண்டும்,” என்றது உச்ச நீதிமன்றம்.
ஜனாதிபதியாக இருந்த காலம் முழுவதும் மாஜி ஜனாதிபதி டிரம்ப்புக்கும் மாநில நீதிமன்றங்களுக்கும் இடையே இடைவிடாது தொடர்ந்த ஒரு சிக்கலுக்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவு கட்டியிருக்கிறது. அதன்படி டிரம்ப் விரும்பியபடி தொடர்ந்தும் தனது வரி விபரங்களை மறைக்க இயலாது.
தன் மீது அரசியல் வஞ்சம் தீர்க்க முயல்கிறார்கள், தான் ஜனாதிபதியாக இருப்பதால் தன் மீது வழக்குத் தொடர முடியாது போன்ற காரணங்கள் சொல்லிக்கொண்டே பல வருடங்களாகத் தனதும் தனது நிறுவனங்களினதும் வரி விபரங்களை வெளிவிட மறுத்து வந்திருக்கிறார் டிரம்ப். நீதிமன்றங்களின் ஆணைகளுக்கு மீண்டும் மீண்டும் மேன்முறையீடு செய்தும் அவைகள் இதுவரை இழுபட்டு வந்தன.
டிரம்ப் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உச்ச நீதிமன்றம் சுமார் அரையாண்டுக்கு முன்னரே அதை மீண்டும் திருப்பியனுப்பி அவர் மாநில நீதிமன்ற ஆணைக்குக் கட்டுப்படவேண்டுமென்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதை மீண்டும் டிரம்ப் மேன்முறையீடு செய்திருந்தார். தற்போது அதையே மீண்டுமொருமுறை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. இனியொரு தடவை அவர் அதை எதிர்க்க முடியாது.
டிரம்ப்பின் வரி விபரங்களை மாநில வழக்கறிஞர்கள் கேட்கக் காரணம் அவர் தனிப்பட்ட முறையிலும், நிறுவனங்களின் சார்பிலும் வரி ஏய்ப்புகள் மற்றும் பொருளாதாரத் தில்லுமுல்லுகளை நிறுவனக் கணக்குகளிலும் செய்திருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டிருப்பதேயாகும். அடுத்த கட்டமாக நியூ யோர்க் மாநில நீதிமன்றம் 2011 முதல் டிரம்ப்பின் வரி விபரங்களை அவரிடம் கோர, அவர் அவைகளை நீதிமன்றத்துக்கு அனுப்பியே ஆகவேண்டும். அந்த விபரங்கள் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்படாவிடினும், நீதிமன்றத்தால் ஆராயப்படும்.
இவைகளைத் தவிர ஜீன் கரோல், ஸ்டோர்மி டானியல்ஸ் ஆகிய இருவர் டிரம்ப் தங்களை வெவ்வேறு தருணங்களில் வன்புணர்வு செய்ததாக வழக்குத் தொடர்ந்திருந்தனர். அவ்வழக்குகளுக்கு எதிராகவும் டிரம்ப் தனது ஜனாதிபதி பதவியைக் காரணம் காட்டி மேன்முறையீடுகள் செய்து, தவிர்த்து வந்தார். அவரது வழக்கறிஞர்கள் எவ்வளவோ முயன்றும் அந்த வழக்குகள் தூக்கியெறியப்படவில்லை.
ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிவிட்டதால் இனிமேல் டிரம்ப் மீது அவ்வழக்கின் ஆராய்வுகள் தொடரும். அவர் அப்பெண்களின் குற்றச்சாட்டுகளுக்குச் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டுப் பதிலழிக்கவேண்டியிருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்