ஷமீமா பேகம் பிரிட்டனுக்கு வர அனுமதியில்லை என்கிறது நாட்டின் உச்ச நீதிமன்றம்.
பங்களாதேஷைப் பின்னணியாகக் கொண்ட பிரிட்டிஷ் பெண் ஷமீமா பேகத்தின் கதை சர்வதேச ரீதியில் பிரபலமானது. பிரிட்டனிலிருந்து சென்று இஸ்லாமியக் காலிபாத்துக்காகப் போரிட்டு அங்கேயே மாட்டிக்கொண்டு சிறையிலிருக்கிறாள் ஷமீமா.
ஐரோப்பாவிலிருந்து சிரியா, ஈராக் போன்ற நாடுகளுக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து காலிபாத் அமைத்து வாழச் சென்ற ஐரோப்பிய இளவயதினருள் ஒருத்தி ஷமீமா பேகம். 2015 இல் பதினைந்து வயதில் இரண்டு சினேகிதிகளுடன் வீட்டிலிருந்து ஓடிப்போய்ச் சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்தாள். அச்சமயத்தில் பெருமளவு நிலப்பரப்பைத் தன்னிடம் வைத்திருந்த அந்த மிலேச்ச இயக்கம் வீழ்ந்தபோது சிரியாவின் அமைப்பொன்றால் கைது செய்யப்பட்டு அல் -ரோஜ் சிறை முகாமில் வாழ்கிறாள்.
ஷமீமா அங்கிருக்கும்போது நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவனை மணந்துகொண்டு மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். அப்பிள்ளைகளெல்லாம் இறந்துவிட்டன. இதே போன்று அங்கே சிறைப்பிடிக்கப்பட்டவர்களுடனும் அவர்களுடைய பிள்ளைகளுடனும் ஆயிரக்கணக்கானோர் வெவ்வேறு சிறை முகாம்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தான் பிரிட்டனுக்குத் திரும்பி வர விருப்பம் தெரிவித்தும் ஷமீமாவின் குடியுரிமையைப் பறித்துவிட்டு “விருப்பமானால் பங்களாதேஷில் குடியேறலாம்,” என்று பிரிட்டன் சொல்லிவிட்டது. பிரிட்டிஷ் குடிமகளான தான் பிரிட்டனுக்குத்தான் வரவேண்டும், அங்கே தான் தனக்கு நியாயமான நீதி கிடைக்குமென்றெல்லாம் தன் பிரதிநிதி மூலம் நீதிமன்றத்தில் வாதாடி ஜூலை 2020 இல் அவளை பிரிட்டனுக்கு வந்து நீதிமன்றத்தில் தனது வழக்கை முன்வைக்க அனுமதிக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஷமீமா பேகம் பிரிட்டனுக்கு வருவது நாட்டின் பாதுகாப்புக்கு மோசமான விளைவுகளைக் கொடுக்கும். அவள் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவளென்று குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சு. அதற்குத் தீர்ப்பாக “ஷமீமா பேகம் பிரிட்டனுக்கு வர அனுமதியளிக்கலாகாது,” என்று 26 ம் திகதியன்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்