பாரிஸில் சென் நதியோரம் கூடிகுடித்துக் களிக்க தடை.
பாரிஸில் நீல வானமும் மிதமான சூரிய ஒளியும் வீடுகளைவிட்டு வெளியே வந்து பொது இடங்களில் ஒன்றுகூடிக் களிப்பதற்கு நகரவாசிகளைத் தூண்டுகின்றன.
பாரிஸ் நகரை ஊடறுக்கும் சென்(Seine) நதியின் கரையோர இருக்கைகளில் திரண்ட பெரும் எண்ணிக்கையானோர் பொலீஸாரால் வெளியேற்றப்பட்டனர். அங்கு ஒன்று கூடவும் மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டதை அடுத்தே பொலீஸார் கரையோரங்களில் இருந்து மக்களை இன்று வெளியேற்றியுள்ளனர்.
நதியோரங்களில் மாஸ்க் அணிந்து இடைவெளி பேணுவதை மறந்து பலரும் கூட்டமாக அமர்ந்து பியர் அருந்தி மகிழ்வதால் பட்டப்பகலில் திருவிழா போன்ற காட்சிகளைக் காணமுடிகிறது. அமுலில் உள்ள சுகாதார விதிகளை மீறுகின்ற இச் செயலைப் பொலீஸார் தடுத்து வருகின்றனர்.
பாரிஸ் புறநகரங்களைக் கடந்து செல்லும் மற்றொரு நதியான Saint-Martin கால்வாய் ஓரமும் மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வார இறுதிப் பொது முடக்கத்தில் இருந்து பாரிஸ் பிராந்தியத்துக்கு விலக்களிக்கப் பட்டிருப்பினும் சுகாதாரக் கட்டுப்பாடு களைப் பொலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
குமாரதாஸன். பாரிஸ்.