கொரோனாத் தொற்றுக்களின் தொய்வுக்குப் பின்னர் மீண்டும் படுவேகமாக வளர்ந்துவரும் சீனாவின் பொருளாதாரம்.
சீனாவின் பொருளாதார இயந்திரம் பெருந்தொற்றுக்காலத்தில் மெதுவாகிவிட்டு மீண்டும் கடுகதியில் இயங்க ஆரம்பித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரியப்படுத்துகின்றன. முக்கியமாகச் சீனாவின் ஏற்றுமதிகளில் அதிகரிப்பைக் காண முடிகிறது.
கடந்த வருடத்தின் முதல் மாதங்களுடன் ஒப்பிடும்போது, இவ்வருடத்தின் முதலாவது இரண்டு மாதங்களில் மட்டுமே சீனாவின் ஏற்றுமதி 60.6 % அதிகரித்திருக்கிறது. முக்கியமாக வீட்டிலிருந்து உத்தியோகம் செய்வதற்குப் பாவிக்கபடும் எலெக்ரோனிக் பொருட்கள் மற்றும் கொரோனாத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான வெளிநாட்டு விற்பனை அதிகரித்திருப்பதைக் கவனிக்க முடிகிறது.
சீனாவின் இறக்குமதி இச்சமயத்தில் 20 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் சீனா கொரோனாத் தொற்றினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் ஏற்றுமதி அதற்கு முந்தைய வருடத்தை விட 17 விகிதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது. இறக்குமதியானது 4 விகித வீழ்ச்சியைக் கண்டிருந்தது.
கடந்த வாரம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்ட மாநாட்டில் நாட்டின் அடுத்த வருடத்துக்கான பொருளாதாரத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 விகிதத்தால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்