வேண்டப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி கொடுத்ததால் 19 நாளில் ஈகுவடோரின் இன்னொரு மக்கள் ஆரோக்கிய அமைச்சர் பதவி விலகினார்.
தென்னமெரிக்க நாடுகளில் அரசியல்வாதிகள் பலர், வரிசைகளுக்கு இடையே தமக்கு வேண்டப்பட்டவர்களை நுழைத்து தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதால் பதவியிழக்கவேண்டியிருக்கிறது. ஆர்ஜென்ரீனா, பெரு நாடுகளைப் போலவே ஈகுவடோரிலும் அது நடந்தேறியிருக்கிறது. எனவே மக்கள் ஆரோக்கிய அமைச்சர் ரொடால்போ பர்பான் பதவி விலகினார்.
இவருக்கு முன்னர் மக்கள் ஆரோக்கிய அமைச்சராக இருந்த யுவான் கார்லோஸ் ஸெவால்லோஸ் பெப்ரவரி மாதக் கடைசியில் பதவி விலகியிருந்தார். அதற்குக் காரணம் அவர் தனது தாயாருக்கும், உறவினர்களுக்கும் கொரோனாத் தடுப்பூசி போட உதவியதாகும். அவர் மீதான விசாரணைகள் நடந்து வருகிறது.
நாட்டு மக்களில் அறுபது விகிதத்தினருக்குத் தடுப்பு மருந்துகள் கொடுக்க இருபது மில்லியன் தடுப்பு மருந்துகளை வாங்கியிருக்கும் ஈகுவடோர் இதுவரை சுமார் 120,000 பேருக்கு அதைக் கொடுத்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்