ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழு நாடுகள் கொவிட் 19 சான்றிதழ்களை விநியோகிக்க ஆரம்பித்திருக்கின்றன.

முடிந்தளவு விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தினுள்ளேயான பிரயாணங்களை இலகுவாக்கவேண்டுமென்பது ஒன்றிய அமைப்பின் முக்கிய குறிகளில் ஒன்றாகும். அதற்காகச் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஏற்பட்ட திட்டங்களின் கனியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்களுக்கு கொவிட் 19 பற்றிய சான்றிதழ் வழங்கும் காலம் நெருங்கி வருகிறது. ஜூலை மாத ஆரம்பத்தில் ஒன்றியத்தின் நாடுகள் எல்லாமே அந்தச் சான்றிதழைக் கொடுக்க ஆரம்பித்திருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஒன்றிய நாடுகளும் தம்மிடையேயே அதைத் தயாரிக்க ஆரம்பித்து அவற்றை ஒன்றிணைக்கவேண்டுமென்பதே திட்டமாகும். எனவே சில நாடுகள் முதல் கட்டத்தில் அவைகளைக் கொடுக்க ஆரம்பித்துவிடும் என்று எதிர்பாக்கப்பட்டது. அதேபோலவே ஜூன் மாத முதலே ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவற்றைத் தமது நாட்டவருக்குக் கொடுக்க ஆரம்பித்திருப்பதுடன் தம்மிடையே அவற்றை ஒருவரொருவர் சரிபார்த்துக்கொள்ளவும் தயார் செய்திருக்கின்றன. போலந்து, பல்கேரியா, ஜேர்மனி, கிரவேஷியா, கிரீஸ், செக் குடியரசு, டென்மார்க் ஆகியவை அந்த நாடுகளாகும்.

ஒரு நபரின் கொவிட் 19 ஆரோக்கியம் பற்றிய இந்தச் சான்றிதழ் டிஜிட்டல் மூலமாகவோ, காகிதத்திலோ இலவசமாக விநியோகிக்கப்படும். இவைகளிலிருக்கும் அடையாளத்தை இன்னொரு நாட்டின் அதிகார மையங்களில் சரிபார்த்துக்கொள்ளலாம். அச்சான்றிதழில் ஒருவர் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்டாரா, அவருக்கு அத்தொற்று வந்து குணமாகிவிட்டாரா என்பவையுடன் அந்த நபரின் சமீபத்தைய கொவிட் 19 பரிசோதனை விபரம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும். 

சில வாரங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய அளவில் 20 நாடுகள் அந்த திட்ட அமைப்பைப் பரிசோதித்ததில் அது வெற்றிகரமாக இயங்குவதாகத் தெரிவதாக ஒன்றியம் அறிவிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றமும், தலைமையும் சகல நாடுகளுக்குள்ளேயும் ஒரே விதமான கோட்பாடு பரிபாலிக்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. 

ஆனால், சில நாடுகள் அவற்றில் தமக்கென்ற வித்தியாசமான எண்ணத்தைக் கொண்டிருக்கலாம், இன்னொரு நாட்டவரை தமது வரையறைகளுக்கு இணங்கக் கையாளலாம், அதனால் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதனால், ஒன்றிய நாடுகளுக்குள்ளே பொருமல்கள் ஏற்படலாமென்றும் பல அரசியல் கணிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இப்படியான ஒரு சான்றிதழைக் கொடுக்க ஆரம்பிப்பதற்கான ஒரு குறியாக ஜூலை மாதத்தினுள் ஒன்றியத்தின் 70 % வயதுக்கு வந்தவர்கள் தடுப்பு மருந்துகளைப் பெறும் ஒழுங்குகள் செய்யப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அந்தக் குறியை எட்டிவிட்டதாக ஒன்றியத் தலைவர் உர்சுலா வொண்டர் லெயோன் குறிப்பிடுகிறார். 

ஜூன் முதல் நாளே, “நாம் எமது குறியை அணுகிவிட்டோம். 250 மில்லியன் தடுப்பு மருந்துகளை எமது குடிமக்களுக்குக் கொடுத்துவிட்டோம். ஒன்றியத்தின் 80 மில்லியன் குடிமக்கள் தமது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுவிட்டார்கள். ஜூலையில் எமது திட்டப்படி ஒன்றியத்தின் 70 % வயதுக்கு வந்தவர்கள் தடுப்பு மருந்தைப் பெற்றிருப்பார்கள்,” என்று டுவீட்டினார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *