திகிராய் விடுதலை இயக்கத்திடமிருந்து நகரங்களைக் கைப்பற்றியிருக்கிறது எத்தியோப்பிய இராணுவம்.

ஒன்றிணைந்த வெவ்வேறு இன விடுதலை இயக்கத்தினர் எத்தியோப்பிய அரசின் இராணுவத்தினரிடமிருந்து பிராந்தியங்களைக் கைப்பற்றியிருந்ததாகச் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன் திகிராய், ஒரோமோ ஆகிய இன விடுதலை இயக்கங்களின் போராளிகளின் கை ஓங்கியிருப்பதாகவும் வந்துகொண்டிருந்த செய்திகளுக்கு மாறாக நாட்டின் இராணுவம் முன்னேறி வருவதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன.

அம்ஹாரா பிராந்தியத்திலிருக்கும் லலிபேலா நகரை எத்தியோப்பிய இராணுவம் திகிராய் விடுதலை இயக்கத்தின் வசமிருந்து கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து அது திகிராய் விடுதலை இயக்கத்தின் வசமிருந்தது. பழங்காலத்தில் மலைகளில் குடையப்பட்ட தேவாலயங்கள் உட்பட எத்தியோப்பியர்களின் பல புனித தலங்களைக் கொண்ட நகரம் அதுவாகும். உலக மக்களின் கலாச்சாரப் பொக்கிஷம் என்று  UNESCO ஆல் பிரகடனப்படுத்தப்பட்ட முக்கிய இடங்களுள்ளது லலிபேலா.

ஒரு வாரத்துக்கு முன்னர் எத்தியோப்பிய பிரதமர் அபிய் அஹமது தானே முன்னின்று நாட்டின் இராணுவத்தைப் போரில் வழி நடத்துவதாக அறைகூவியிருந்தார். அச்சமயத்தில் ஓங்கியிருந்த விடுதலை இயக்கத்தினரை இராணுவம் வெற்றிபெற ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது. குறிவைத்துத் தாக்கியழிக்கும் காற்றாடி விமானங்களை சீனா, ஈரான் ஆகிய நாடுகள் எத்தியோப்பிய அரசுக்குக் கொடுத்திருப்பதாகவும் எமிரேட்ஸ் அரசு ஆயுதங்களைக் கொடுத்து வருவதாகவும் அல் ஜசீரா செய்தி ஸ்தாபனம் குறிப்பிடுகிறது.

செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட படங்கள் எமிரேட்ஸுக்கும் எத்தியோப்பியாவுக்குமிடையே விமானங்களாலான பாலம் அமைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. சமீப மாதங்களில் அவ்விரண்டு நாடுகளுக்குமிடையே 90 விமானங்கள் ஆயுதங்களுடன் பறந்ததாகத் தெரிகிறது. சீனாவின் ஆயுதங்களும் எத்தியோப்பியாவுக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

அடிஸ் அபாபா நகரில் போர் உண்டாகலாம், நிலைமை மோசமாகி காபுலிலிருந்து வெளிநாட்டவர்களை அவசர அவசரமாக வெளியேற்றியது போன்ற அவல நிலை உருவாகலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம், தமது நாடுகளிலிருந்து அங்கே சென்றிருக்கும் அரச ஊழியர்களில் “மிக முக்கிய தேவை” இல்லாதவர்களை உடனடியாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்