அமைதி ஒப்பந்தத்தையடுத்து திகிராய் பிராந்தியத்துக்கான மனிதாபிமான உதவிகளுக்குக் கதவுகள் திறக்கப்பட்டன.

ஆபிரிக்க நாடுகளின் கூட்டுறவு அமைப்பின் தலைமையில் எத்தியோப்பியா – திகிராய் போர் நிறுத்தம், அரசியல் தீர்வு போன்றவைக்கான பேச்சுவார்த்தைகள் நடந்த பின்னர் நல்விளைவுகள் தெரிய ஆரம்பிக்கின்றன. இரண்டு வருடங்கள் நடந்த போரின் பின்னர் புதன்கிழமையன்று முதல் தடவையாக ஐ.நா -வின் உணவுத்திட்ட அமைப்பின் மூலம் அனுப்பப்பட்ட 15 பாரவண்டிகள் திகிராய் மாநிலத்துக்குள் பிரவேசித்திருக்கின்றன. இதுவரை வெளியுலகுக்கு முழுசாக மூடப்பட்டிருந்த அப்பகுதியின் மக்களில் பலர் பசி, பட்டினியின் எல்லையைத் தொட்டிருப்பதாக ஐ.நா – வின் உதவியமைப்பின் நிர்வாகி குறிப்பிட்டார்.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இரு தரப்பாரும் நடத்திய பேச்சுவார்த்தைகள் திகிராய்க்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க எத்தியோப்பிய அரசு ஒப்புக்கொண்டது. ஆறு மில்லியன் மக்கள் வாழும் திகிராய் மாநிலத்தில் இரண்டு வருடங்கள்- போருக்குப் பின் உணவு, மருந்துகள் ஆகியவை கிடைப்பது மிகப் பெரும் பிரச்சினையாகியிருக்கிறது.   

இதற்க்கு முன்னர் ஐந்து மாத போர்நிறுத்தத்திற்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் மீண்டும் சண்டை தொடங்கியதால்  உதவி நிறுவனங்களால் உதவிகளை வழங்க முடியவில்லை. இந்தப் போர்களுக்கு முன்பே, திகிராய்  பஞ்ச நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தது. ஐ.நா -வின் உணவுத்திட்ட உதவியமைப்பு  ஆகஸ்ட் தொடக்கத்தில் பிராந்தியத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் பஞ்சத்தால் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக எச்சரித்திருந்தது.

அமைதிப் பேச்சுவார்த்தையில் கொடுத்த உறுதிமொழியை முழுவதுமாக நடைமுறைப்படுத்தவிருப்பதாக எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அஹமது குறிப்பிட்டிருக்கிறார். எத்தியோப்பிய இராணுவத்துக்கு உதவ திகிராய்க்குள் நுழைந்த எரித்திரிய இராணுவமும் அங்கிருந்து பின்வாங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *