எத்தியோப்பியா- திகிராய் சமாதான ஒப்பந்தம். பிராந்தியத்தில் அமைதி நிலவும் என்ற நம்பிக்கைக் கீற்று.

ஆபிரிக்க நாடுகளின் ஒன்றியத்தினால் தென்னாபிரிக்காவில் சுமார் ஒரு வாரமாக நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரண்டு வருடங்களாகப் போரில் ஈடுபட்டுவரும் இரண்டு தரப்பாரும் ஒப்பந்தமொன்றுக்குச் சம்மதித்திருக்கிறார்கள். எத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கும் திகிராய் போராளிகளுக்கும் இடையே தீர்த்துக்கொள்ள வேண்டிய கருத்துகள் மேலும் இருப்பினும் அரை மில்லியனுக்கும் அதிகமானோரைக் கொன்று, மில்லியன்களுக்கும் அதிகமானோரை வாழுமிடங்களை விட்டுத் துரத்தியிருக்கும் போர் நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

முன்னாள் நைஜீரிய ஜனாதிபதி ஒலிசெகுன் மத்தேயு ஒபசஞ்ஜோவின் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தன. பேச்சுவார்த்தைகள் முடிந்ததும் அவர்களை வாழ்த்தினார் ஒபசஞ்ஜோ. இரண்டு பகுதியாரும் தத்தம் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு படிப்படியாக ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணவேண்டும் என்கிறது ஒப்பந்தம், எவ்வித விபரங்களுமின்றி. அத்துடன், போரில் எத்தியோப்பியாவுக்கு ஆதரவாக திகிராய்க்குள் தனது பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை அனுப்பிய எரித்திரியா ஒப்பந்தத்தை எப்படி எதிர்கொள்ளும் என்பதும் தெளிவில்லை. அவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. 

போரில் திகிராய் மாநிலம் முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டுப் பெரும் அழிவுகளை எதிர்கொண்டது. கொலைகள், கற்பழிப்புகள், கொள்ளைகளில் இரண்டு பகுதியினரின் இராணுவங்களும் ஈடுபட்டதாகச் சாட்சிகள் குறிப்பிடுகிறார்கள். திகிராய்க்குள் தொலைத்தொடர்புகளை நிறுத்தி, முழுவதுமாக மூடிவிட்டே எத்தியோப்பிய மத்திய அரசு போரை நடத்தியது. எந்த ஒரு பத்திரிகையாளரும் உள்ளே நடமாட அனுமதிக்கப்படவில்லை. எனவே பக்கம் சாராத செய்திகளெதுவும் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது.

எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அஹமதும், திகிராய்த் தலைமையும் தாம் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு நடப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *