வட இலங்கையின் மூன்று தீவுகளில் சீனா கட்டவிருந்த இயற்கைச் சக்தி மையங்கள் மாலைதீவுகளுக்கு மாற்றப்பட்டன.

இவ்வருட ஆரம்பத்தில் Sino Soar Hybrid Technology நிறுவனம் மூலமாக வட இலங்கையையடுத்த மூன்று குட்டித் தீவுகளில் இயற்கைவள எரிசக்தி நிலையங்களை நிறுவ சீனா உறுதிகூறியிருந்தது. நாகர்தீவு, நைனாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் கட்டப்படுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் சிறீலங்காவுக்குத் தேவையான எரிசக்தியை இயற்கை வளம் மூலம் பெற உதவும் நோக்கத்துடன் நிறைவேற்றப்படவிருந்தன.

அந்த மூன்று தீவுகளும் தமிழ்நாட்டை அடுத்திருப்பதால் அங்கே சீனாவின் திட்டங்களை நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டிருப்பதை இந்தியா கடுமையாக ஆட்சேபித்திருந்தது. 

தற்போது சீனா அந்தத் திட்டங்களைத் தான் நிறைவேற்றப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. அதற்கான காரணமாக “இன்னொரு நாட்டின் மூலமாக ஆபத்து ஏற்படலாம்,” என்று குறிப்பிட்டிருக்கிறது.

சீனா தனது திட்டத்தைக் கைவிடவில்லை என்று சிறீலங்காவிலிருக்கும் சீனத் தூதுவராலயம் தெரிவித்திருக்கிறது. எது உண்மை என்பது தொடர்ந்தும் தெரியாத நிலைமை.

அதேசமயம் மாலைதீவின் 12 தீவுகளில் சீனா சூரியசக்தியை உற்பத்தி செய்யும் மையங்களைக் கட்டவிருப்பதாக நவம்பர் 29 திகதியன்று அறிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்