குறிப்பிட்ட நேரத்துக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் சிறீ லங்காவில் தடுப்பூசி போடுதல் நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் 500,000 ஐ சிறீலங்காவுக்கு நன்கொடையாகக் கொடுத்தது இந்தியா. அத்துடன் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடுதல் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. காரணம், உறுதிகொடுத்தபடி செரும் இன்ஸ்டிடியூட் தடுப்பு மருந்துகளை அனுப்பாததாலாகும்.

நன்கொடையாகக் கிடைத்த தடுப்பு மருந்துகளையடுத்து மேலும் தடுப்பு மருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்துகொண்ட சிறீலங்கா இதுவரை 913,219 பேருக்கு தடுப்பூசியைக் கொடுத்திருக்கிறது. முதல் தடுப்பூசி கொடுத்த 12 வாரத்துக்குள் இரண்டாவதையும் கொடுக்கவேண்டுமென்பதால் கைவசமிருக்கும் தடுப்பு மருந்துகளை ஏப்ரல் 19 முதல் ஏற்கனவே முதலாவது தடுப்பூசி பெற்றவர்களுக்குக் கொடுக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பாலேயோ, சிறீலங்காவின் மருந்துகளை அனுமதிக்கும் திணைக்களத்தாலேயோ இதுவரை அங்கீகரிக்கப்படாத சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்துகள் 600,000 சிறீலங்காவுக்கு நன்கொடையாகக் கிடைத்திருக்கிறது. அவற்றை அங்கு வேலை செய்யும் சீனர்களுக்கு மட்டும் கொடுக்க சிறீலங்கா முடிவுசெய்திருக்கிறது. 

சிறீலங்காவில் தடுப்பு மருந்துகளை அனுமதிப்பது பற்றிய முடிவுகளை எடுக்கும் அமைப்புக்குத் தடுப்பு மருந்துகளைப் பிரேரிக்கும் பிரத்தியேக மருத்துவக் குழுவின் தலைவர் லலந்தா ரனசிங்கே சினோபார்ம் தடுப்பூசிகள் சிறீலங்காவின் மக்கள் மீது பாவிக்கத் தகுதியற்றவை என்று குறிப்பிட்டிருக்கிறார். சிறீலங்காவின் மக்கள் ஆரோக்கியம் பற்றி முடிவு செய்யும் மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ரவீந்திர ரன்னன் எலியாவும் நாட்டு மக்கள் மீது பாவிப்பதற்கு சினோபார்ம் தடுப்பு மருந்து ஏற்றதா என்று முடிவெடுக்கக்கூடியதான விபரங்களை அந்த நிறுவனம் தரவில்லை என்கிறார். அதே காரணத்தைக் காட்டி அதைச் சிறீலங்காவில் பாவிக்கலாகாது என்று பிரேரிக்கிறார்.

செரும் இன்ஸ்டிடியூட் முன்பு உறுதிகொடுத்த நேரத்துக்குத் தடுப்பு மருந்துகளை அனுப்பித் தரக்கூடுமென்று தெரியவில்லை என்று சிறீலங்காவின் கொவிட் 19 தொற்றுக்களைத் தடுக்கும் முடிவுகளை எடுக்கும் அமைச்சரான சுதர்சினி பெர்னாண்டோபிள்ளை. சமீப வாரத்தில் இந்தியா தனது கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்வதைத் தடுத்திருப்பதே நிலைமைக்குக் காரணமாகும்.

ரஷ்யாவிலிருந்து 700,000 தடுப்பு மருந்துகளைப் பெறவும் சிறீலங்கா ஒப்பந்தம் செய்யவிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *