பெலாரூஸ் ஜனாதிபதிக்கு எதிராகப் போராடியதற்காகக் கைதுசெய்யப்பட்டவர் வழக்கு நடக்கும்போதே தன் கழுத்தை வெட்டிக்கொண்டார்.
பெலாரூஸ் ஜனாதிபதி கடந்த வருடம் தேர்தல் நடாத்தித் தான் வென்றதாக அறிவித்ததை எதிர்த்து ஊர்வலத்தில் பங்குபற்றியவர் ஸ்டீபன் லதிபோவ். செப்டெம்பரில் கைதுசெய்யப்பட்ட அவரை செவ்வாயன்று நீதிமன்றத்திற்கு வழக்குக்காகக் கொண்டுவந்தார்கள். அவ்வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது தன்னிடமிருந்த சிறிய ஆயுதமொன்றை எடுத்து எல்லோருக்கும் முன்னானாலேயே தன் கழுத்தை வெட்டிக்கொண்டார் ஸ்டீபன். ஆயுதமென்று கருதப்பட்டது பேனாவென்று பின்னர் தெரியவந்தது. தனது கையின் மணிக்கட்டையும் அவர் வெட்டிக்கொண்டார்.
“அப்பா, நான் செய்யாத குற்றத்துக்கு என்னைக் குற்றவாளியாக ஒப்புக்கொள்ளச் சொல்கிறார்கள். மறுத்தால் என்னைத் தனிமைச் சிறையிலடைப்பதுடன் எனது உறவினர்களையெல்லாம் தொந்தரவு செய்யப்போவதாக மிரட்டுகிறார்கள்,” என்று நீதிமன்றத்தில் சொல்லிவிட்டுக் கழுத்தை வெட்டிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்டீபனின் தந்தை செர்கேய் நீதிமன்றத்தில் சாட்சியாக அழைக்கப்பட்டிருந்தார். வழக்கு ஆரம்பிக்க முன்னர் ‘தான் 51 நாட்கள் சித்திரவதை முகாமொன்றில் வைக்கப்பட்டிருந்ததாகவும், மோசமாக நடாத்தப்பட்டதாகவும், குடும்பத்தினரும் அதேபோன்ற நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்,” என்றும் ஸ்டீபன் தந்தைக்குச் சொல்லியிருந்தார்.
41 வயதான ஸ்டீபன் ஊர்வலம் நடக்கமுதல் சுவர்களில் எழுதப்பட்டிருந்த கோஷங்களை அழிக்க முயன்ற அரச அதிகாரிகளைத் தடுக்க முயற்சி செய்திருந்தார். அதன் பின்னர் ஊர்வலத்தின்போது நகரச் சதுக்கத்தில் பலரோடு நின்று கோஷமிட்டார். தேர்தல் முடிவுகளுக்கெதிரான எதிர்ப்புப் பேரணிகளில் பங்கெடுத்ததற்காகவும், வேறு வகைகளில் லுகசென்கோவை எதிர்த்ததற்காகவும் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டார்கள். 35,000 சிறைக்குள் வைக்கப்பட்டார்கள்.
ஜனாதிபதிக்கெதிரான நடவடிக்கைகளைப் பற்றி எழுதும், வெளிநாட்டு ஊடகங்களுக்குச் செய்திகள் கொடுத்து வரும் ஊடகவியலாளர்களும் கைதுசெய்யப்பட்டுச் சித்திரவதைச் சிறையில் வைக்கப்படுகிறார்கள். அப்படியான அனுபவத்தைப் பெற்றவர்களில் ஒருவர் பத்திரிகையாளர் அலெக்ஸாண்டர் புரகோவ். அவர் தற்போது வழக்குக்காக எதிர்பார்த்து வெளியே விடப்பட்டிருப்பதாக ஜேர்மன் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்திருக்கிறார்.
தனது கழுத்தை வெட்டிக்கொண்ட ஸ்டீபனின் உடல்நிலை பற்றிய முழுமையான விபரங்கள் எவருக்கும் வெளியிடப்படவில்லை. அவர் மருத்துவசாலையில் கோமா நிலையில் இருப்பதாக மட்டும் வானொலிச் செய்தி மூலம் தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்