மாஸ்க்கை முற்றாக நீக்குவதற்கு இன்னும் கொஞ்சம் பொறுப்போம், அவசரம் வேண்டாம்! – மக்ரோன்.
வெளி இடங்களில் மாஸ்க் அணியவேண்டும் என்ற கட்டாயத்தை உடனடியாகக் கைவிட்டுவிட வேண்டாம் என்று அதிபர் மக்ரோன் மக்களைக் கேட்டுள்ளார். “மிகுந்த அவசரம் வேண்டாம். நாங்கள் இன்னமும் விழிப்பு நிலையிலேயே இருக்கிறோம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டின் எல்லை மாவட்டங்களில் விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் மக்ரோன் வைரஸ் தொற்றுக்குப் பின்னரான நிலைமைகள் தொடர்பாகப் பொது மக்களுடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடி வருகிறார்.
பிரான்ஸில் தொற்று நிலைவரம் சீரடைந்து வருவதை அடுத்து சில நகரசபைகள் பொது இடங்களில் மாஸ்க்அணியவேண்டும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி வருகின்றன.
Saint-Cirq-Lapopie (Lot) என்னும் பகுதியில் மாஸ்க் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த மக்ரோன்,கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற பொறுப்பை உடனடியாகக் கைவிட்டு விடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
“மிக வேகமாக நாங்கள் முன்னகர்ந்து விடக் கூடாது. வெளி இடங்களில் மாஸ்க்கை முடிவுக்குக் கொண்டுவருவது படிப்படியாக – ஒரு புதிய நடைமுறை ஒழுங்கில்-முன்னெடுக்கப்படும். ஒட்டுமொத்தமாக நாங்கள் இன்னமும் விழிப்பு நிலையில் தான் இருக்கிறோம். வரவிருக்கும் சில வாரங்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம் “-என்று மக்ரோன் தெரிவித்தார்.
விடுமுறையை இந்த ஆண்டும் நாட்டுக்குள்ளேயே கழிப்போம். கோடை விடுமுறைப் பயணங்கள் இந்தவருடம் சாத்தியமே. அதற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்ள முடியும். 2021விடுமுறையை பிரான்ஸில் கழிப்பதே நல்லது – எனவும் மக்ரோன் தெரிவித்தார்.
12-18 வயது இளம் பருவத்தினருக்குத் தடுப்பூசி ஏற்றுவது ஜூன் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்ற தகவலை வெளியிட்ட அவர், சுகாதார நிறுவனங்களின் ஆலோசனைப்படி-பெற்றோரது முழுச் சம்மதத்துடனேயே – அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை -கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தடுப்பூசி விரைவுபடுத்தப்பட்ட நிலையில் நாட்டின் ஆறு மாவட்டங்களில் வைரஸ் தொற்றுக்கள் வேகமாக அதிகரித்துவருகின்றன என்று அரசு எச்சரிக்கைசெய்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தொற்றுக்கள் குறைந்துள்ள போதிலும் தென்மேற்கே Occitanie, Nouvelle-Aquitaine பிராந்தியங்களில் ஆறு மாவட்டங்களில் எச்சரிக்கை செய்யும் அளவில் வைரஸ் பரவி வருவதாக அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.சுயகட்டுப்பாடுகளைக் கைவிட்டுவிட வேண்டாம் என்று அவர் நாட்டு மக்களை எச்சரித்தும் உள்ளார்.
குமாரதாஸன். பாரிஸ்.