கிரேக்க எழுத்துகளது பெயர்களை வைரஸ் திரிபுகளுக்கு சூட்ட முடிவு.
இந்தியாவில் பரவும் வைரஸுக்கு டெல்ரா, கப்பா என இரு நாமங்கள் டெல்ரா, அல்ஃபா, பீற்றா, காமா, கப்பா.
இவர்கள் எல்லாம் யார்? நாடுகள் எங்கும் நாளாந்தம் பிறப்பெடுத்துப் பரவி வருகின்ற புதுப்புது கொரோனா வைரஸ் திரிபுகளுக்குக் கிரேக்க எழுத்துகளின் பெயர்களைக் கொண்டு (names of Greek letters) ஐ. நாவின் உலக சுகாதார அமைப்பு சூடியுள்ள புதிய பெயர்கள் தான் இவை.
நாடுகளின் பெயர்களில் திரிபுகளை அழைப்பதால் அந்த நாடுகளுக்கும் மக்களுக்கும் ஏற்படுகின்ற களங்கங்கள் பாகுபாடுகளை நீக்குவதற்கு இந்தப் புதிய பெயரிடும் திட்டம் உதவும் என்றும் அது தெரிவித்துள்ளது. அழைப்பதற்கு இலகுவானவை, நினை வில் நிற்கக் கூடியவை என்பதாலேயே கிரேக்க எழுத்துகளது (Greek alphabet) பெயர்களைச் சூட்டத் தீர்மானிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
இந்தப்பெயர்கள் வைரஸ்களின் அறிவியல் பெயர்களுக்கு (scientific names) மாற்றானவை அல்ல.ஆனாலும் இலகுவான பொதுப் பாவனையை நோக்கமா கக்கொண்டே அவற்றைத் தெரிவு செய்துள்ளோம் – என்று ‘கோவிட்-19’ தொழில்நுட்பக் குழுவின் தலைவி மரியா வான் கெர்கோவ் (Maria Van Kerkhove) கூறினார்.
இந்தியாவில் தோன்றி அந்த நாட்டை உலுக்கியதுடன் உலகில் 50 நாடுகளுக்குப் பரவி இருக்கின்ற இந்தியத் திரிபில் (variant indien) இரண்டு மரபு மாற்றங்கள் ஒன்றாக கலந்துள்ளன. அவற்றுக்கு B.1.617.2 மற்றும் B.1.617. 1 என இரண்டு அறிவியல் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. தற்போது முறையே “டெல்ரா”(Delta) “கப்பா”(Kappa) என இரண்டு தனித்தனி பெயர்கள் அவற்றுக்கு இடப்பட்டிருக்கின்றன.
இங்கிலாந்தில் தோன்றி மிக வேகமாக உலகெங்கும் பரவிய B.1.1.7 என்ற திரிபு பிரிட்டிஷ் வைரஸ், ஆங்கில வைரஸ்எனப் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தது. அதற்கு “அல்ஃபா” (Alpha)என்ற புது நாமம் சூட்டப்படுகிறது. அதேபோன்று தென்னாபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட திரிபுக்கு”பீற்றா”(Beta)என்றும், பிறேசிலில் அறியவந்த மாறுபாட்டுக்கு “காமா” (Gamma) எனவும்புதிய பெயர்கள் இடப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் தோன்றிய திரிபுகள் (B.1.427 / B.1.429) “எப்சிலன்” (Epsilon) எனவும், பிலிப்பின்ஸ் நாட்டில் கண்டறியப்பட்ட P.3 என்ற வைரஸ் திரிபு “தேற்றா”(Theta) எனவும் அழைக்கப்படும்.
இனிமேல் இந்தப் புதிய பெயர்களைப்பயன்படுத்துமாறு சுகாதார அமைப்பு நாடுகளையும் , ஊடகங்களையும் கேட்டிருக்கிறது.
மாறுபாடடைந்த திரிபுகள் அதிகரித்து வருவதால் அவற்றுக்குப் பெயர் இடுகின்ற குழப்பங்களும் அதிகரித்து வருகின்றன. நாடுகள், நகரங்கள், கிராமங்கள் என அவை முதலில் தோன்றிய இடங்களே வைரஸின் பெயர்களாக மாறுவதால் பல வித சிக்கல்கள்.
நாடுகள், மக்கள் என்ற பேதங்களையும்புறக்கணிப்புகளையும் வேண்டத்தகாததுவேசங்களையும் தவிர்க்கும் நோக்குடனேயே வைரஸ் திரிபுகளுக்கு புதிய பெயர்களைச் சூட்டுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கின்றது.
கொரோனா வைரஸை “சீன வைரஸ்” என்று முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் அமெரிக்க ஊடகங்களும் அழைத்ததை சீனா கண்டித்தது. ஆசியவம்சாவளி மக்கள்மீது வெறுப்புணர்வு தோன்றுவதற்கு அது வழி வகுத்தது. புதிய வைரஸ் திரிபை ‘இந்திய வைரஸ்’ என்று குறிப்பிடுவதற்கு இந்தியா அண்மையில் ஆட்சேபம் தெரிவித்தது.
‘கோவிட்-19 வைரஸ்’ விவகாரத்தை அரசியல் கட்சிகளும் குழுக்களும் குடியேற்ற எதிர்ப்புவாதம், தீவிர தேசியவாதம், வெள்ளை மேலாதிக்கம், யூதஎதிர்ப்புவாதம், இன வெறுப்பு எனப் பலநோக்கங்களில் தங்களது ஆதாயங்களுக்காக்கப் பயன்படுத்தி வருவதை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) சுட்டிக்காட்டிக் கண்டித்திருந்தது.
பாரிஸிலிருந்து குமாரதாஸன்