ஒமெக்ரோன் “லேசானது” அல்ல, தொற்று நோயின் முடிவும் அல்ல!

பாதுகாப்பில் கவனம் எடுங்கள்! சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.

ஒமெக்ரோன் வைரஸ் திரிபு தென் ஆபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட போது அது மிக வேகமாகப் பரவக் கூடியது ஆனால் தீவிரம் குறைந்தது, அதிகம் ஆட்களைக் கொல்லாது என்றவாறான ஆய்வுகள் வெளியாகியிருந்தன.புதிதாக நடத்தப்பட்ட ஆய்வுகளும்அதனை உறுதி செய்துள்ளன.

ஆனால் ஒமெக்ரோன் தீவிரம் குறைந்தது எனக் கணக்கிடுவது தவறு என்று ஐ. நா- வின் சுகாதார நிறுவனமாகிய WHO உலக மக்களை எச்சரித்திருக்கிறது. அதற்கு முன்னர் பரவிய டெல்ரா திரிபுடன் ஒப்பிடுகையில் தீவிரம் குறைந்ததாகக் காணப்படினும் அது உலகெங்கும்மருத்துவமனை அனுமதிகளை வேகமாகஅதிகரிக்கச் செய்து வருகிறது. அத்துடன் அதிக உயிரிழப்புகளுக்கும் காரணமாகவுள்ளது என்பதை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

“டெல்ராவின் பிடியில் இருந்த பல நாடுகளில் தற்போது ஒமெக்ரோன் ஆதிக்கம்செலுத்தும் திரிபாக மாறியிருக்கிறது.டெல்ராவுடன் ஒப்பிடுகையில் – குறிப்பாக தடுப்பூசி ஏற்றியவர்களில்-ஒமெக்ரோன்தொற்றின் தாக்கம் குறைவாக (less severe) இருந்தாலும் அதற்காக அதனை லேசான (mild) வைரஸ் என்று கணக்கிடுவது தவறானது.

“உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) இவ்வாறு தெரிவித்திருக்கிறார். சுனாமி அலைபோன்ற அதன் தொற்று வேகம் உலகெங்கும் மருத்துவமனைகளை நிரம்பச் செய்திருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதேசமயம் செய்தியாளர்களிடம் பேசியசுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்பப்பிரிவின் பொறுப்பாளர் மரியா வான் கெர்கோவ் (Maria Van Kerkhove),கொரோனாப் பெருந்தொற்று முற்றாக நம்மை விட்டு விலகுவதற்கு முந்திய கடைசித் திரிபே ஒமெக்ரோன் என்று கருதுவது”பெரும்பாலும் சாத்தியமில்லை” எனக்கூறியிருக்கிறார். எனவே மக்கள் தங்களைப் பாதுகாப்பதற்கான சுய பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டியது முக்கியம் என்பதை அவர் நினைவூட்டியுள்ளார்.

இந்த வாரம் உலகெங்கும் ஒ 9.5 மில்லியன் ஒமெக்ரோன் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 71 வீதத்தால் அதிகமானது என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.